சென்னையில் டி20 உலகக்கோப்பை போட்டி: பிசிசிஐ விடுத்த எச்சரிக்கை!
தென்னிந்திய நகரங்களான சென்னையும் பெங்களூருவும் ஐபிஎல் போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்திய பிறகும்...


2016 மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான போட்டிகள் பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹலி, மும்பை, நாக்பூர், டெல்லி, கொல்கத்தா ஆகிய 8 இடங்களில் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் என பிசிசிஐ நேற்று அறிவித்ததது.
சில வாரங்களுக்கு முன்பு, டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், 8 கிரிக்கெட் மையங்களில் சென்னையும் இடம்பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக ‘ஐ', ‘ஜே', ‘கே' ஆகிய 3 பார்வையாளர் மாடங்கள், முறையான அனுமதி பெறாமல் எழுப்பப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இதனால் டி20 உலகக்கோப்பைப் போட்டி, சென்னைக்கு ஒதுக்கப்படாது என்று முதலில் செய்திகள் வெளிவந்த நிலைமையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த வாய்ப்பு சென்னைக்கு எப்படிக் கிடைத்தது?
இது ஐசிசி போட்டி என்றாலும் கிரிக்கெட் மையங்கள் தொடர்பான முடிவை போட்டியை நடத்தும் நாடுதான் முடிவு செய்யும். மூன்று மாடங்களும் பிரச்னையில் இருப்பதால் ஆரம்பத்தில் சென்னையை பிசிசிஐ ஒதுக்கிவிட்டது. ஆனால் ஐசிசி தலைவரான என். ஸ்ரீனிவாசன், சமீபத்தில் நடந்த ஒரு ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூரைச் சந்தித்துப் பேசினார். அதன்படி ஸ்ரீனிவாசன் 3 மாடங்கள் குறித்து சில உறுதிகள் கொடுத்ததாலேயே சென்னைக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. 3 மாடங்களின் பிரச்னையைச் சரிசெய்யாவிட்டால் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட போட்டி ரத்து செய்யப்பட்டு, வேறொரு மைதானத்துக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மொத்தம் 8 நகரங்கள் இந்தப் போட்டியின் கிரிக்கெட் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்திய அணி 4 லீக் போட்டிகளில் ஆடுகிறது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் என இந்த உலகக்கோப்பைப் போட்டியில் 6 முக்கிய ஆட்டங்கள் உள்ளன. கொல்கத்தாவைத் தவிர்த்து, 7 கிரிக்கெட் மைதானங்களில் ஏதோ ஒரு மைதானம் இந்த முக்கியப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கப் போகிறது. அது சென்னையாக இருக்கக்கூடாது என்று சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகிறார்கள். (2011 உலகக்கோப்பை போட்டியின்போது இந்திய அணி ஆடும் போட்டி ஒன்று சென்னைக்கு ஒதுக்கப்பட்டது.)
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் இறுதிப் போட்டியை நடத்துகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிற வாய்ப்பு ஏற்பட்டால் அந்தப் போட்டி டெல்லிக்கு ஒதுக்கப்படும். அல்லது, இரண்டு அரையிறுதிகளில் ஒன்று டெல்லிக்குக் கிடைக்கும் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். மற்றொரு அரையிறுதிப் போட்டி மும்பைக்கு ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நகரங்களான சென்னையும் பெங்களூருவும் ஐபிஎல் போட்டிகளை மிகச்சிறப்பாக நடத்திய பிறகும் டி20 உலகக்கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியோ அல்லது அரையிறுதிப் போட்டிகளோ சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு ஒதுக்கப்படாதது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...