நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்தியாவின் வெற்றி தொடருமா?

இதுவரை நடைபெற்ற 9 உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் நான்கு முறை மோதியுள்ளன. நான்கு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இப்போது, 5-வது முறையாக மொஹாலியில் புதன்கிழமை இரு அணிகளும் பல

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:59 pm

தி. இன்பராஜ்

இதுவரை நடைபெற்ற 9 உலகக் கோப்பைத் தொடர்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் நான்கு முறை மோதியுள்ளன. நான்கு முறையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இப்போது, 5-வது முறையாக மொஹாலியில் புதன்கிழமை இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 1975-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பை போட்டித் தொடரில் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றிருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

 1979-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது உலகக் கோப்பை போட்டித் தொடரில் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி ஒரு வெற்றியைக் கூட பெறாமல் நாடு திரும்பியது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி "ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்ததால் இந்தியாவுடன் மோத வாய்ப்பு அமையவில்லை.

 1983-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பை போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இருப்பினும், அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் இந்தத் தொடரிலும் இந்தியா- பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு அமையவில்லை.

 1987-ல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்திடமும், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடமும் தோற்று தொடரில் இருந்து வெளியேறின.

 இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் நான்கு உலகக் கோப்பை போட்டியிலும் எந்த ஆட்டத்திலும் எதிர்த்து விளையாடாதது இருநாட்டு ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

 முதல் வெற்றி: 1992-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1992 மார்ச் 4-ம் தேதி சிட்னி நகரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

 முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்தது. டெண்டுல்கர் 54 ரன்னும், அஜய் ஜடேஜா 46 ரன்னும் எடுத்தனர்.

 தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்குள்

 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.

 இருப்பினும், இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்தையும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி முதன்முதலாக கோப்பையைக் கைப்பற்றியது.

 பரபரப்பான காலிறுதி... இதேபோல, 1996-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டித் தொடரில் காலிறுதிச் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பெங்களூரில் மார்ச் 9-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்றது.

 முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை குவித்தது. சித்து சிறப்பாக ஆடி 93 ரன்கள் எடுத்தார். ஜடேஜா அதிரடியாக 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். ஒரு ஓவர் குறைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

 இந்தத் தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது.

 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் "சூப்பர் சிக்ஸ்' சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. திராவிட் அதிகபட்சமாக 61 ரன்களை குவித்தார்.

 தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 4-வது முறையாக... 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மார்ச் 1-ம் தேதி சந்தித்தன.

 முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. சையத் அன்வர் சிறப்பாக ஆடி 101 ரன்கள் குவித்தார்.

 பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 45.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 276 ரன்களை எடுத்து உலகக் கோப்பையில் 4-வது முறையாக பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 98 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.

 2007-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 9-வது உ லகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம், இலங்கையுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியதால் முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது.

 8 ஆண்டுகளுக்குப் பிறகு... உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானும், இந்தியாவும் மொஹாலியில் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை சந்திக்கின்றன. உலகக் கோப்பையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுதான் இறுதிப் போட்டி என்பது போன்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்தியாவும், பாகிஸ்தானும் சம பலத்துடனே காணப்படுகின்றன. சுழல்பந்து வீச்சை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பதால் இதுவரை மற்ற அணிகளை அச்சுறுத்திய அப்ரிதியின் பந்து வீச்சு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே நம்பலாம். பேட்டிங்கில் இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், துல்லியமான பந்துவீச்சு, சிறப்பான "பீல்டிங்' இல்லாதது இந்திய அணியின் சிறிய பலவீனம்.

 இருப்பினும், இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் நான்கு முறை பாகிஸ்தானை எதிர் கொண்ட இந்திய அணி இதுவரை தோற்றதில்லை.

 எனினும் இந்திய வீரர்கள் தங்களது முழு பலத்தையும் இந்த ஆட்டத்தில் காண்பித்தால் மட்டுமே உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற "சென்டிமென்ட்' காலாவதியாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.