பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ பலராமர் அவதரித்த தினம் இன்று!
பெருமாளின் எட்டாவது அவதாரமாகத் தோன்றியவர், ஸ்ரீ பலராமர். பெருமாளின் அவதாரங்களிலேயே, வெண்ணிற தோற்றம் உடைய அவதாரம் ஸ்ரீ பலராமர் அவதாரம்.


பெருமாளின் எட்டாவது அவதாரமாகத் தோன்றியவர், ஸ்ரீ பலராமர். பெருமாளின் அவதாரங்களிலேயே, வெண்ணிற தோற்றம் உடைய அவதாரம் ஸ்ரீ பலராமர் அவதாரம்.
வட நாட்டினர் ஸ்ரீ பலராமர் ஜெயந்தியை ஆவணி மாதம் சிரவண நட்சத்திரத்தன்று கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் சித்திரை மாதம், வளர்பிறை, த்ரிதியை அன்று அனுசரிக்கின்றோம். அதாவது அட்சய த்ரிதியை அன்று கொண்டாடுகிறோம்.
முனிவர் கர்காச்சாரியார் வைத்த பெயர் "ராமன்" என்பது தான். அவர் பலசாலியாகத் திகழ்வார் என்பதை யூகித்து, "பலராமர்" என்று பெயர் வைத்தார்கள். சாண்டில்ய மகரிஷியால் "சங்கர்ஷணன்" என்கிற திருநாமமும் சூட்டப்பட்டது. இவருக்கு, பலதேவன், பலபத்ரன், கலாயுதன் போன்ற நூற்றியெட்டு பெயர்கள் உண்டு. அவரின் அவதாரம் பற்றி அறிந்து கொள்வோம்.
கம்சனின் கொடுமைக்குப் பயந்த ஸ்ரீ வசுதேவரும், ஸ்ரீ தேவகி மாதாவும், கர்ப்பிணியான ஸ்ரீ ரோஹிணி மாதாவை மதுராவிலிருந்து விலகி, கோகுலத்திற்குச் சென்று விடும்படி அன்புக் கட்டளை இட்டனர்.
அவர் கோகுலம் செல்வதற்கு வெண் புரவி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ ரோஹிணி மாதா ஆண் வேடம் பூண்டார். விடியற்காலை நேரத்தில் தான் புறக்காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என்பதையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.

சூல் சுமந்த வயிற்றுடன் ஆண் வேடத்தில், ஒருவர் கண்ணிலும் படாமல் ஸ்ரீ ரோஹிணி மாதா, கோகுலம் சென்றடைந்தார். ரோஹிணி மாதா வந்தவுடன் , பலரும், "வந்த ஆண் மகன், ஸ்ரீ யசோதா மாதாவின் உறவினர், தம்பி முறையாக இருக்கலாம்" என்று தான் எண்ணினார்கள்.
உண்மையைத் தெரிந்துகொண்டவுடன், அனைவர் முகத்திலும் ஒரு பிரகாசம். முக்கியமாக ஸ்ரீ நந்தகோபர், யசோதா இருவரும் ஒரே குரலில் "கோகுலத்திற்கு இன்று ஒரு தலைவி கிடைத்து விட்டார்" என்றல்லவா மகிழ்ந்து போனார்கள்.
ரோஹிணி மாதாவை எந்த வேலையையுமே யாரும் செய்ய விடவில்லை.
நந்தகோபரும், "அண்ணி" என்கிற சொல்லுக்கு மறு சொல் கூட மொழியாமல் கண்ணை இமை காப்பது போல் அல்லவா காத்து வந்தார்.
யசோதா மாதாவோ, ரோகிணி மாதாவை விட வயது கூடுதலாக இருந்தாலும், "அக்கா" என்று தான் அழைத்துவந்தார். அவருக்கு அனைத்து சேவைகளையும் புரிந்து வந்தார்.

ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், இன்று குழந்தை பிறக்கும். இல்லை நாளை பிறந்து விடும் என்று எல்லோரும் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் மகரிஷி சாண்டில்யர், "இன்னும் சில நாட்கள் ஆகும்" என்று கூறினார். அன்றிலிருந்து, ரோகிணி மாதாவுடன், அறையில், இன்னும் இரண்டு தாதியர் அதிகப்படியாக காவலுக்கு இருந்தார்கள். எப்பொழுது பிறக்கும் என்று யார் அறிவார்கள்?
ரோகிணி மாதா கருவுற்றிருந்த சமயம், யசோதா மாதாவைத் தவிர நந்தகோபரின் இரு சகோதரர்களின் துணைவியாரும் கூட கருவுற்றிருந்தார்கள். ஆனால், கோகுலத்தில் அவர்களுக்குக் கூட அத்தனை ஒரு பந்தோபஸ்து இருக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஒரு நாள், ரோஹிணி மாதாவின் அறை முழுவதிலும் திடீரென்று நறுமண வாசம். மாதாவுடன், தாதியரும் ஒன்றும் புரியாமல் எழுந்து உட்கார்ந்து விட்டார்கள். அறை முழுவதும் அற்புத ஒளி நிறைந்தது. ஏதோ அற்புதம் ஒன்று நிகழப் போவதற்கான அறிகுறி என்று மட்டும் அனைவரும் உணர்ந்தார்கள்.
ரோஹிணி மாதாவின் மீது மேலிருந்து எண்ணற்ற மலர்கள் சொரிந்தன.
ஸ்ரீ பிரும்ம தேவன், ஸ்ரீ கங்காதரன், ஸ்ரீ தேவேந்திரன், ஸ்ரீ கணேசன், இன்னும் பல தேவர்கள் அவ்வறையில் பிரசன்னமாகி, ரோஹிணி மாதாவை வணங்கி நின்றார்கள். ரோஹிணி மாதாவின் கண்களுக்கு மட்டுமே அந்தக் காட்சி புலப்பட்டது. ரோகினி மாதாவிற்கு எப்பொழுது பிரசவம் நிகழ்ந்தது என்பது கூடத் தெரியவில்லை.

சாண்டில்ய மகரிஷி அந்தத் தருணம் , "ரோகிணியின் வயிற்றில் உதித்திருப்பவர், எல்லா தேவர்களாலும் நித்தியம் வணங்கப்படுபவர் ஆவார். இவர் பிறந்த நட்சத்திரத்தினைக் கொண்டு பார்த்தால் "சங்கர்ஷணன்" என்று அழைக்கப்படுவார்." என்று கூறினார்.
கோகுலத்தில் மங்கல இசை ஒலிக்கத் தொடங்கியது. ஊரே விழாக் கோலம் பூண்டது. அவரவர் இல்லத்தில் குழந்தை பிறந்தது போல கோப கோபியர்கள் ஆர்ப்பரித்தனர். நந்தகோபர் , நூற்றுக்கணக்கான பசுக்களைத் தானமாகக் கொடுத்தார்.
நந்தகோபர் சடங்கினை விதிப்படி நடத்தினார். ஆனால் கம்சன் காதுகளுக்கு இந்தக் குதூகலம் எட்டிவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு யசோதா மாதா கூட நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டு குழந்தையை சுற்றி சுற்றி வந்து பார்த்து ஆனந்தித்தார் .
என்றுமே விழாக்கோலம் பூண்டிருக்கும் கோகுலம் , அன்றைய தினம், முன்பு இதுவரை பார்த்திராத அளவில், கேளிக்கைகளும், குதூகலமும் நிறைந்திருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
- மாலதி சந்திரசேகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...