நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குறையாண்டில் நிறை சாதனை

ஏக இறைகொள்கையை ஏற்ற முறையில் எடுத்தியம்ப உலகில் தோன்றி தூதுத்துவம் பெற்ற நபிமார்கள் இருபத்து நான்காயிரம் 

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:02 am

மு. அ. அபுல் அமீன்

ஏக இறைகொள்கையை ஏற்ற முறையில் எடுத்தியம்ப உலகில் தோன்றி தூதுத்துவம் பெற்ற நபிமார்கள் இருபத்து நான்காயிரம் என்ற கருத்து அறிஞர்களிடையே நிலவுகிறது. ஆயினும் குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் இருபத்து ஐந்து. அவர்களின் கொள்கை பிரசாரத்தில் பெற்ற வெற்றிகளை ஒப்பிடுகையில் குறையாண்டில் நிறை சாதனை புரிந்தது நீதர்நபி முஹம்மது (ஸல்) அவர்களே.

ஆதம் நபி அவர்களின் பிள்ளைகளுக்கும் வாரிசுகளுக்கும் நேரிய இறைவன் ஒருவன் என்று ஓதி உணர்த்தினார்கள். மக்காவில் கஃபாவைக் கட்டினார்கள். இத்ரீஸ் நபி மக்களை ஈர்க்கும் இனிய உரையால் இறைவனுக்குப் பணிய பணித்தார்கள். ஷீது நபியின் காலத்தில் பணியாதவர்களையும் ஏக இறை கொள்கையை ஏற்று பணிந்து வணங்கி பண்புற செய்தார்கள். 365 வயதில் வானுலகு சென்றவர்கள் திரும்பவில்லை. ""அவரை நாம் உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்'' என்று எழில்மறை குர்ஆனின் 19-57 ஆவது வசனம் கூறுகிறது

நூஹ் நபி 950 ஆண்டுகள் ஏக இறைகொள்கையை எடுத்து இயம்பினார்கள். எண்பது நபர்களே நன்னெறியில் ஏக இறைகொள்கையை ஏற்றனர். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவரை விசுவாசிக்கவில்லை என்று இச்செய்தியை இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 11-40 ஆவது வசனம். ஹூது நபி அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆது கூட்டத்தினரை நீதி போதனையை ஏற்று ஏக இறைவனைப் போற்றி புகழ்ந்து துதிக்கும் புண்ணிய வழிக்குக்கொண்டு வர முடியவில்லை. ஹூது நபி இருபது வயதில் நபித்துவம் பெற்றார்கள்; 464 வயதில் இறந்தார்கள். சாலிஹ் நபி 200 வயதில் மக்காவில் இறந்தார்கள். தமூது கூட்டத்தினரில் மிகச் சிலரே இவர்களின் இறைவனுக்கு இணை வைக்காத ஒரே இறைவனை வணங்கும் முறையை ஏற்றனர்.

இப்ராஹிம் நபி நூஹ் நபிக்குப் பிறகு 1263 ஆண்டுகள் கழித்து பிறந்தார்கள். நம்ரூத் மன்னனுக்கும் அவனின் ஆட்சியில் வாழ்ந்த மக்களுக்கும் ஏக இறை கொள்கையை போதித்ததால் நம்ரீத்தின் பெருங்கொடுமைக்கு உள்ளானார்கள். இப்ராஹிம் நபி கஃபாவைப் புதுப்பித்து கட்டினார்கள்; 175 வயதில் இறந்தார்கள்.

லூத் நபி இப்ராஹிம் நபியின் சகோதரரின் மகன், ஸதூம் நாட்டினர் இந்நபிகளின் ஓரிறைக் கொள்கையை ஏற்காது எதிர்த்ததால் பூகம்பத்தில் அழிந்தனர். ஏக இறை கொள்கையை ஏற்ற சிலர் ஸதூமிலிருந்து முன்னரே லூத் நபியுடன் வேற்றூர்களுக்குச் சென்று நிலநடுக்கத்தில் இருந்து தப்பி ஒப்புயர்வற்ற ஓரிறைவன் அருளால் நலமாய் வளமாய் வாழ்ந்தனர்.

இஸ்மாயில் நபி இப்ராஹிம் நபியின் மகன். 137 வயது வாழ்ந்தார்கள். இறைவனுக்கு இணை வைத்து வணங்கிய அமாலிக்கா வர்க்கத்தை ஏக இறை கொள்கையை ஏற்க செய்தார். இந்நபி வழி வந்தவர்களே இன்றைய அரபு நாடுகளில் வாழும் அரபியர். இஸ்ஹாக் நபி இஸ்மாயில் நபியின் சகோதரர். 180 வயதில் ஷாம் நாட்டில் இறந்தார்கள். இவர்களின் சந்ததியினர் ஷாம் நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள். யாகூப் நபி இஸ்ஹாக் நபியின் முதல் மகன். 140 வயதில் எகிப்தில் இறந்தார்கள். இவர்களைப் பின்பற்றியோரில் சிலர் இஸ்ரவேலர்கள். யூசுப் நபி யாகூப் நபியின் மகன். 110 வயதில் இறந்தார்கள். இவரின் நல்லாட்சியில் ஆய்யூப் நபி இஸ்லாமிய பிரசாரம் செய்தார்கள். 93 வயதில் இறந்தார்கள். ஸீஅய்ப் நபி இப்ராஹிம் நபியின் மகன் மத்யனின் மகன். செங்கடல் பக்கமுள்ள மத்யன் அய்க்கா நகரங்களில் சிலரே இவர்களின் இஸ்லாமிய நெறியை ஏற்றனர்.

மூசா நபி எகிப்தில் நானே அரசன் நானே கடவுள் என்று ஆட்சி செய்த பிர்அவ்ன் அரசனிடமும் அவனின் குடிமக்களிடமும் இஸ்லாத்தைப் போதித்தார்கள். மிக சிலரே இஸ்லாத்தை ஏற்றனர். 120 வயதில் இறந்தார்கள். இல்யாஸ் நபி மூசா நபியின் தவ்ராத்தை வேதத்தைப் புறக்கணித்து புறம்பாக முரணாக வாழ்ந்த மக்களுக்குப் போதனை புரிந்தார்கள். போதனையில் சாதனை ஏற்படவில்லை. யூனூஸ் நபி தஜ்லா நதியோர நைனுவா நகரில் வாழ்ந்த மக்களுக்கு நற்போதனை புரிந்தார்கள். பயன் சிறிதே. தாவூது நபிக்கு தவ்ராத் வேதத்தில் மாறுபட்டு வேறுபட்டு கூறுபட்டு இருந்த மக்களைத் திருத்துவதற்கு ஜபூர் வேதம் அருளப்பட்டது.

40 ஆண்டுகள் ஆட்சி புரிந்து 70 வயதில் தாவூத் நபி இறந்தார்கள். சுலைமான் நபி தாவூத் நபியின் மகன்; 40 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து அல்லாஹ் ஒருவன் என்றும் அவனையே வணங்க வேண்டும் என்றும் வாகாய் பிரசாரம் செய்தார்கள். 52 வயதில் இறந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களின் நாட்டினரே. ஜகரிய்யா நபி சுலைமான் நபியின் மகன். தவ்ராத் வேதத்தைப் போதித்தார்கள். இவர்களின் போதனையால் இஸ்லாத்தை ஏற்றவர்கள் சிலரே. ஈசா நபியின் ஏக இறை கொள்கையை எடுத்தோதும் இன்ஜீல் வேதத்தை அவர்களின் வாழ்நாளில் ஏற்றவர்கள் சிலரே.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயதில் நபித்துவம் கிடைத்தது. 63 வயதில் இறந்தார்கள். 23 ஆண்டுகள் இஸ்லாமிய பிரசாரத்தில் ஏக இறை கொள்கையை ஏற்காத மக்கத்து குறைஷிகள் கொடூரமாய் தொடுத்த தொல்லைகள் எல்லையற்றவை. இனிய நபி(ஸல்) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றவர்களும் மக்கத்தைத் துறந்து மதீனாவிற்கு நபித்துவம் பெற்ற 13 ஆம் ஆண்டில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். இலகுவான இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கையில் பெருகுவதைப் பொறுக்காத பொறாமை கொண்ட குறைஷிகள் தொடர்ந்து போர் தொடுத்தனர். பிற நாட்டு இறைவனுக்கு இணை வைக்கும் மன்னர்களையும் போர் தொடுக்க தூண்டி கூட்டு போர் திட்டம் தீட்டினர். அத்தனை பேர்களையும் போர்களையும் வென்று வாகை சூடினார்கள் நாடி நல்லறம் பேணிய பெருமானார் நபி (ஸல்) அவர்கள்.

எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் எப்போரையும் துவக்கவில்லை. எதிரிகள் தொடுத்த போர்களைத் தடுத்து வெற்றி கண்டார்கள். வெற்றியுற்ற போர்களில் எதிரிகளை வெட்டி வீழ்த்தவில்லை; எதிரியை வலுவிழக்கச் செய்து இன்னுயிர் காத்து நன்னெறியில் வயப்படுத்தி வியப்புற வெற்றி பெற்றார்கள். ""வரலாற்றில் சமயம் உலகியல் இரு நிலைகளிலும் வெற்றி கண்ட ஒருவர். இஸ்லாத்தை எளிய நிலையில் எடுத்துரைத்து அடுத்தடுத்து ஏற்காதோர் தொடுத்திட்ட தொல்லைகளைத் தகர்த்தெறிந்து மாபெரும் அரசியல் தலைவரானவர் முஹம்மது (ஸல்)'' என்று முதன்மைப்படுத்துகிறார் மைக்கேல் ஹார்ட் ""அந்த நூறு மனிதர்கள்'' என்ற நூலில்.

ஹிஜ்ரி 8 ஆம் நூற்றாண்டில் ரத்தம் சிந்தாது உட்பட அத்தனை மக்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதுமை படைத்தார்கள். பண்பு நபி (ஸல்) அவர்கள் பத்தாண்டுகளில் நிறுவிய இஸ்லாமிய அரசு பத்து லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டது. இதனையே, அமரகவி பாரதியார் மதுர தமிழில் மகிழ்ந்து பாடுகிறார்.
""வேண்டு முன்னர் அருளினன் அல்லாஹ்
முஹம்மது நபிமஹா சுதந்திர புருஷர்
மஹாசூரர் மஹாஞானி மஹா பண்டிதர் 
மஹாபக்தர் மஹா லௌகீக தந்திரி''
சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும் நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து நாகரிக மிக்க வலுவுள்ள சமூகமாக எவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்க முடிந்தது என்று வியக்கிறார் வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைல். ""இறை தூதர்களில் நிறை வெற்றி பெற்றவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்'' என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் 14 ஆவது பதிப்பு பகர்கிறது.

அந்நந் நபி (ஸல்) அவர்கள் வழியில் வழுவாது வாழ்ந்து வையத்தில் அமைதி நிலவ ஆவன செய்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம். 
- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.