/

தெய்வ தரிசனம்... ஆட்சி செய்யும் பதவிகள் கிடைக்க அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர்!

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது.

News image
ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
Updated On :7 நவம்பர் 2025, 6:50 am

என்.எஸ். நாராயணசாமி

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்

இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

அச்சிறுபாக்கம் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் என்பதால், அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. அதனால், அச்சிறுபாக்கத்துக்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்

அச்சிறுபாக்கம் அஞ்சல்,

மதுராந்தகம் வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 301.

இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள், முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

Story image

இந்தக் கோட்டைகளுக்கு, விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களை இந்த அசுரர்கள் மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க, சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாக்கி தேவர்களுடன் புறப்பட்டார். ஆனால், அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்துவிட்டார்.

Story image

தேர் அச்சு முறிந்ததற்குக் காரணத்தை அறிந்த சிவன், விநாயகரை வேண்ட, அவரும் தந்தை சொல் தட்டாமல் தேரின் அச்சை சரியாக்கினார். அதன்பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால், இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

Story image

இக்கோயில், ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை நேராக இல்லாமல் சற்று வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள ஆட்சிபுரீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் என்ற இரண்டு மூலவர்கள் சன்னதியாகும். இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என்று இரண்டு அம்பாள் சன்னதிகளும் தனித்தனியே அமைந்துள்ளன.

Story image

கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயிலில் நுழைந்தவுடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றுக்கு எதிரே ஆட்சீஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர்தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சன்னதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது

Story image

உள் வாயிலைக் கடந்தவுடன், வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு நேரே சென்றால், உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாசப் பெருமாள், பழனி ஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சன்னதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆகையால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

Story image

ஆலயத்தின் வடக்கு வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார்.

Story image

கோயிலைக் கண்ட மன்னன் இரு சன்னதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விவரம் கேட்டான். முனிவரும் அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சன்னதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சன்னதியியும் அமைத்தேன் என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

Story image

வடக்கு வெளிப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சன்னதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். ஆட்சிபுரீஸ்வரரை வழிபட்டால் நல்ல வேலை, வேலை உயர்வு, வேலையில் ஆட்சி செய்யக்கூடிய பதவி ஆகியவை கிட்டும், அமாவாசைதோறும் இவ்வாலயத்தில் நடைபெறும் சிறப்பு. பூஜைகளில் கலந்துகொண்டு இத்தல இறைவனை வழிபட தொழிலில் ஏற்படும் தடைகள், ஜென்ம வினைகள், தோஷங்கள் ஆகியவை நீங்கும்

அச்சுமுறி விநாயகர்

சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகர் என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சன்னதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.

Story image

புதிய செயல்கள் தொடங்குவதற்குமுன் இவ்விநாயகரிடம் வேண்டிக்கொண்டால், அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்துவிட்டு விநாயகர் துதி பாடி பிறகுதான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் என்பதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் “முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த” என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.