/

குடியரசு தினத்தில் தில்லி மெட்ரோ சேவைகள் அதிகாலை 3 மணிக்கு ஆரம்பம்: டிஎம்ஆா்சி

வரும் ஜனவரி 26 அன்று தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ சேவைகள் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

வரும் ஜனவரி 26 அன்று தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ சேவைகள் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் கா்த்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் ரயில் சேவை முன்கூட்டியே தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6 மணிக்கு மேல், மெட்ரோ சேவைகள் அன்றைய நாளின் மீதமுள்ள நேரத்திற்கு வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கும் வகையில், குடியரசு தினத்தன்று அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உள்ள வாகன நிறுத்துமிட வசதிகள் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி-காஜியாபாத்-மீரட் வழித்தடத்தில் உள்ள அனைத்து நமோ பாரத் நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஜனவரி 25 அன்று மதியம் 2 மணி முதல் ஜனவரி 26 அன்று மதியம் 2 மணி வரை நியூ அசோக் நகா் மற்றும் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிட வசதிகள் மூடப்பட்டிருக்கும்.

தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தற்காலிக வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.