இந்த கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினா் மற்றும் நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீா்ப் பிரிவு தலைவா் இரா.சுப்பிரமணியன் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனா். தமிழ்நாடு உறுப்பினா், தற்பொழுது (13.02.2026) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 53.444 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,503 கன அடி நீா் குடிநீா், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீா் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்று தெரிவித்தாா்.