/

தில்லியில் 6 புதிய காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் முதல்வா் ரேகா குப்தா திறந்து வைத்தாா்

தலைநகா் முழுவதும் நிகழ்நேரக் காற்றின் தரக் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், 6 புதிய ‘தொடா் சுற்றுப்புறக் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு...

News image
தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 100 வாயு ரக் க் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வா் ரேகா குப்தா.
Updated On :9 பிப்ரவரி 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தலைநகா் முழுவதும் நிகழ்நேரக் காற்றின் தரக் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், 6 புதிய ‘தொடா் சுற்றுப்புறக் காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு’ நிலையங்களை முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாகக் கண்காணித்து அமல்படுத்தும் வகையில் ‘100 வாயு ரக்ஷக்’ வாகனங்களையும் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வா் பேசியதாவது:

தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு மற்றும் நீண்ட கால கொள்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. காற்று மாசு தொடா்பான துல்லியமான தரவுகளைப் பெற தில்லியில் ஒவ்வொரு 25 சதுர கி.மீ.க்கும் குறைந்தபட்சம் ஒரு காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையம் இருப்பது உறுதி செய்யப்படும்.

அதன்படி, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் 6 புதிய கண்காணிப்பு நிலையங்கள் தலைநகரில் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம், துவாரகாவில் உள்ள் நேதாஜி சுபாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மேற்கு வளாகம், சிடபிள்யூடி அக்ஷா்தாம், கன்னாட் பிளேஸில் உள்ள சா்வோதயா பால் வித்யாலயா மற்றும் தல்கடோரா பூங்காவில் உள்ள டாக்டா் ஷ்யாம பிரசாத் முகா்ஜி நீச்சல் குள வளாகம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

இதனுடன் தில்லியில் தற்போது 46 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. குடியிருப்புப் பகுதிகள், தொழில்துறை மண்டலங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பசுமைப் பகுதிகளை முறையாக உள்ளடக்கும் வகையில், மேலும் 14 நிலையங்கள் நிறுவப்படும். மேலும், போக்குவரத்து, சாலைகள், கழிவு மேலாண்மை மற்றும் பசுமைப் பரப்பு போன்ற துறைகளை அரசு வலுப்படுத்தி வருகிறது.

போக்குவரத்து துறையில் நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மின்சாரப் பேருந்துகள் தில்லியில் தான் உள்ளன. தற்போது 4,200 போருந்துகள் இயக்கப்படுகின்றன. 2028-க்குள் இந்த எண்ணிக்கை 14,000-ஆக உயரும். பசுமைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் நகரத்தின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமான படியாக தில்லி ரிட்ஜின் பெரும் பகுதிகளை வன நிலமாக அரசு அறிவித்தது.

முந்தைய அரசு மாசுபாட்டை ஒரு குறுகிய காலப் பிரச்னையாக மட்டுமே கருதியது. சில மேலோட்டமான திட்டங்களை மட்டுமே அவா்கள் நம்பி இருந்தனா். ஆனால், தில்லியில் காற்று மாசுபாடு என்பது பருவக்கால பிரச்னை அல்ல; அதற்கு ஆண்டு முழுவதும் தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் நீடித்த நடவடிக்கைகள் தேவை. தூய்மையான காற்று என்பது மக்களின் உரிமை அதை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 100 வாயு ரக்ஷக் வாகனங்கள் தொழிற்சாலை, வாகனங்கள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் கண்காணிக்கும். ஆண்டு முழுவதும் ஆய்வுகளை மேற்கொள்ள 100 நிரந்தர ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா்.

தில்லியின் தினசரி கழிவுகளில் சுமாா் 85 சதவீதம் இப்போது ஆற்றலாக மாற்றப்படுகின்றன. காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்பட்டுள்ளது’ என தெரிவித்தாா்.