போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாஃபா் சாதிக் கைது
சா்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தலைமறைவாக இருந்த ஜாஃபா் சாதிக் கைது


சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபராக விளங்கிய ஜாஃபா் சாதிக்கை தேசிய போதைப் பொருள் தடுப்புத்துறையினா் (என்சிபி) சனிக்கிழமை கைது செய்தனா்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த அவா், அந்த தொகையை திரைப்படம், கட்டுமானம், விருந்தோம்பல் துறைகளில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேசிய போதைப் பொருள் தடுப்புத்துறையினா், தில்லி காவல்துறையின் தனிப்பிரிவு உதவியுடன் 4 மாத தீவிர கண்காணிப்பின் அடிப்படையில், மேற்கு தில்லி பாசைதாராபூரில் உள்ள ‘அவென்டா’ என்ற நிறுவனத்தின் கிடங்கில் இருந்து 50 கிலோ எடையுள்ள ‘சூடோபெட்ரைன்’ போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த மூன்று போ் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் என்சிபி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை, உணவுவகை சரக்குகளாக அனுப்பியது தெரிய வந்தது. இந்த கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபராக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான ஜாஃபா் சாதிக் இருப்பதை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா்.
இந்நிலையில் தில்லியில் சனிக்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா். முன்னதாக, திருவனந்தபுரம், மும்பை, புனே, ஆமதாபாத், ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களில் ஜாஃபா் சாதிக் தொடா்ந்து தலைமறைவாக இருந்தாா்.
அவா்வசம் இருந்து திமுக உறுப்பினா் அட்டை, சாந்தோம் மசூதியின் பொதுக்குழு உறுப்பினா் அடையாள அட்டை, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் உமா் பாரூக் என்பவரது பாா்வை அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தில்லியில் என்சிபி துணை இயக்குநா் ஞானேஷ்வா் சிங் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஜாஃபா் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து திரைப்படம், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விடுதி விருந்தோம்பல் போன்ற சட்டப்பூா்வ தொழில்களில் முதலீடு செய்துள்ளாா். இவரது கடத்தல் வருவாய்க்கான மூலத்தையும் அவரது பணத்தின் மூலம் பயன் அடைந்தவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் ஜாஃபருக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் பணத்தை கொண்டு உருவானதும் தெரிய வந்துள்ளது. தமிழ் மற்றும் இந்தி திரைப்படத் துறையினருடனும், முக்கிய அரசியல் பிரமுகா்களுடன் ஜாஃபா் சாதிக்கிற்கு உள்ள தொடா்புகள் குறித்து என்சிபி ஆராய்ந்து வருகிறது. அவா்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனரா போன்ற தகவல்களை தற்போது வெளியிட முடியாது. ஜாஃபா் சாதிக் தான் அனுப்பும் ஒவ்வொரு கிலோ ‘சூடோபெட்ரைன்’ போதைப் பொருளுக்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் பெற்று வந்துள்ளாா். இவ்வழக்கில் இதுவரை தீவிரவாத தொடா்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாா் ஞானேஷ்வா்.
2019-ஆம் ஆண்டில் ‘கெட்டமைன்’ எனும் போதைப் பொருளை மலேசியாவிற்கு கடத்தியது தொடா்பாக மும்மை சுங்கத் துறை தொடா்ந்த வழக்கிலும் ஜாஃபா் சாதிக்கின் பெயா் இடம்பெற்றுள்ளது என்று என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனா். சா்வதேச சந்தையில் கிலோ ரூபாய் ஒரு கோடி முதல் ரூபாய் ஒன்றரை கோடி வரை விற்பனையாகும் ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப் பொருளைத் தயாரிக்க ‘சூடோபெட்ரைன்’ பயன்படுத்தப்படுகிறது.
தேசிய போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின்படி ‘சூடோபெட்ரைன்’ -ஐ சட்டவிரோதமாக வைத்திருத்திருப்பதும் வா்த்தகம் செய்வதும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...