சூப்பர் மாடல் எனும் புகழேணியின் உச்சியில் அமர்ந்து அவள் விளம்பரப் படம் ஒன்றுக்காக மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், தோழியிடம் இருந்து அவளுக்கொரு மொபைல் அழைப்பு வருகிறது. ’எனக்குத் திருமணம், நீ எத்தனை பிஸியாக இருந்தாலும் என் திருமணத்திற்கு வந்து சேர்’ என்று; தோழி அழைப்புடன் நிறுத்திக் கொண்டிருந்தால் ஏஞ்சலினா தனக்குத்தானே குற்ற உணர்வில் மூழ்காமல் இருந்திருப்பாளோ என்னவோ?! ஆனால், தோழி, நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், உனக்கும் வயதாகவில்லையா? நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று ஏஞ்சலினாவின் அகத்தைக். கிளறி விட, அவளுக்குள் திருமண வேட்கை மூள்கிறது. ஆனாலும், வாய்ப்புகளுக்காகப் பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்ற நிலையில் தன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்ற அவநம்பிக்கை துரத்தவே, அவள் சற்றும் யோசிக்காமல் ஷாட்டுக்குத் தயாரா என்ற கேள்வியுடன் தன்னை அணுகும் அபிநவ்வைப் பார்க்கிறாள்.