எழுத்துலகில் ராஜேஸ்குமாரின் பெருமை என்பது அவருக்கு கிடைத்திருக்கும் வாசகர்களை அடிப்படையாகக் கொண்டது. ஆம் இன்று மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள் வகிப்பவர்கள் முதல் ரயில்வே ஃப்ளாட்பார கூலிகள், துப்புறவுப் பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை அவருக்கான பிரத்யேக ரசிகர்கள் உண்டு. இவரது நாவல்களை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம், ஏனெனில் இவருடைய கதைக்களங்கள் பெரும்பாலும் அன்றாட சமகாலநிகழ்வுகளை மையமாகக் கொண்டவை என்பதோடு இவர் கரண்ட் அஃபையர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய தற்கால நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்டுகளை எல்லாம் சடுதியில் கிரகித்துக் கொண்டு அதைத் தமது கதைகளில் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இவரது கதைகளை வாசிக்கக் கூடிய சாமான்யர்களுக்கு கூட இஸ்ரோ, சேட்டிலைட், ஃபாரன்ஸிக் ரிப்போர்ட், எஃப் ஐ ஆர், டிடெக்டிவ் ஏஜென்ஸியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் அத்துப்படியாகி விடுகின்றன. எனவே இப்படி புதிது, புதிதாக எதையாவது அறிந்து கொள்ள வேண்டியாவது இவரை வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றார்கள். ராஜேஸ்குமாருக்கு வாசக ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான்.