மும்பை இளைஞர் 26 வயது அமான், வழக்கம் போல இரவு சாப்பாட்டுக்குப் பின் குட்டியாய் ஒரு வாக்கிங் சென்று வந்த பிறகே தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் தனது வீட்டில், இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வாக்கிங் செல்லத் தெருவில் இறங்கினார், சற்று தூரத்தில் தெரு முக்கு தாண்டும் போது எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஓலம் போன்ற பரிதாபச் சிணுங்கல் காதில் விழவே முதலில் அதை ஏதோ பூனை அழுகிறது போலும் என்று புறம் தள்ளியவர் மீண்டும் தனது வாக்கிங்கைத் தொடரப் போனார். ஆனால் அவரால் அந்த ஓலத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. பூனையாகவே இருந்தாலும் கூட ‘தானொரு விலங்குகள் நேசன் என்பதால்... ஏதாவது பூனைக்கு அடிபட்டு, காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் அது அழுகிறது போலும் என்றெண்ணி சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார். கிட்டெ நெருங்க, நெருங்க அந்த ஓசை இன்னும் அதிகரிக்கவே அருகில் சென்றார். அங்கே தெருமுனையில் மாநகராட்சி குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு மூடப்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து தான் சத்தம் வருகிறது என்றுணர்ந்து அமான் அதைத் திறக்க முயற்சித்தார். சற்று சிரமப்பட்டேனும் ஆட்டோவைத் திறந்து உள்ளே பூனையைத் தேடினால், அதுவரை தீனமான குரலில் அழுது கொண்டிருந்தது பூனை அல்ல பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்த ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை! என்று தெரிய வந்ததும் அமான் முதலில் திகிலடைந்து விட்டார்.