2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிக்கலில் பெருஞ்சிக்கல் மலச்சிக்கல், அதை சாத்வீகமாகக் கழிப்பது எப்படி?!

ஒருவர் தேவையில்லாமல் பிறரிடம் சிடுசிடுத்தால் அதற்குக் காரணம் சில சமயங்களில் மலச்சிக்கலாகவும் இருக்கலாம் எனப் பல நேரங்களில் அனுமானிக்க முடிந்திருக்கிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

கார்த்திகா வாசுதேவன்

மனித வாழ்க்கையில் ஆகச்சிறந்த கடினமான கணங்கள் எதுவென்றால் அது பிரசவ வலி என்று கூடச் சொல்லி விட முடியாத அளவுக்கு இந்த மலச்சிக்கல் பிரச்னை பலரது வாழ்வில் பெரும் பிரளயங்களைக் கூட உண்டுபண்ணி விடுகிறது. இதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும். காலை எழுந்ததும் சிரமமின்றி இயற்கைக் கடன் கழிக்க முடியாவிட்டால்... அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளை நம்மால் திட்டமிட்டபடி ஒழுங்கான கிரமத்தில் முடிக்கவே முடியாமலாகி விடும். இது மட்டும் சரியாகப் பூர்த்தியாகி விட்டால் பிறகு அந்த நாளே ஒளிமயமாகி விடுகிறது என்று சொல்வோர் அனேகர் பேர்.

Story image

சரி இந்தப் பிரச்னையின் ஆணிவேர் எங்கிருந்து துவங்குகிறது என்று பார்த்தால் அது நமது உணவுப் பழக்கத்தைத் தொட்டு உடலில் நீர்பற்றாக்குறை, சில சமயங்களில் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப் போடும் சோம்பேறித்தனம் என எங்கெல்லாமோ சுற்றி விட்டுக் கடைசியில் நமது அஞ்ஞானத்தின் வாசலில் வந்து முட்டிக் கொண்டு நிற்கும். ஆகவே, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட காரணங்களுக்கு எல்லாம் தங்களது வாழ்வில் இடமுண்டா என்று ஒருமுறைக்கு இருமுறை அலசிப்பார்த்து அதற்கேற்ற வகையில் தங்களது நிவாரணத்தைத் தேடிக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்ட பல உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்ட வகையில் ஒருவர் தேவையில்லாமல் பிறரிடம் சிடுசிடுத்தால் அதற்குக் காரணம் சில சமயங்களில் மலச்சிக்கலாகவும் இருக்கலாம் எனப் பல நேரங்களில் அனுமானிக்க முடிந்திருக்கிறது. சித்தப்பா ஒருவர், அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவர். அவருக்கு அன்றைய இயற்கைக் கடன் விஷயம் சாத்வீகமாக நேர்ந்து விட்டால் மனிதர் சாந்தசொரூபியே தான். மாறாக அதில் ஏதேனும் சிக்கல் என்றாலே அவ்வளவு தான் தீர்ந்தது வீட்டு மனிதர்களின் நிம்மதி. கழிப்பறைக்கும், கூடத்துக்குமாய் எதிர்ப்படுவோர் மீதெல்லாம் சள், புள்ளென்று விழுந்து பிடுங்கி உர்ரென முகத்தை வைத்துக் கொண்டு நடந்து, நடந்தே அன்றைய நாளை ஒரு சோகநாளாக்கி விடுவார்.

Story image

இவர் தேவலாம். எங்களது கிராமத்தில் வயதான தாத்தா ஒருவர் இருந்தார், அவர் தீவிர வைஷ்ணவர். கொல்லையில் ஒதுங்கும் போது வானத்தில் கருடன் பறந்தால் கூட; கிருஷ்ணா, கிருஷ்ணா’ எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடியவர். அவருக்கு சர்வமும் கிருஷ்ணமயம் தான். பேச்சைத் துவக்குவதும், முடிப்பதும் கூட கிருஷ்ணனிடத்தில் தான். வாயில் கடினமான வசைகள் எதுவும் வரவே வராது என்று பெயரெடுத்தவர் அவர். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்கக் கூடாது. ஆனால், வந்து விட்டதென்றால் என்னவெல்லாம் செய்வார் என்று ஊரில் இளைஞர்கள் இன்றும் கேலி செய்வார்கள். கொல்லைக்குப் போகையில் சரியாக இயற்கைக் கடன் கழிக்க முடியாவிட்டால், உட்கார்ந்த வாக்கில் திரும்பித், திரும்பிப் பார்த்துக் கொண்டு, சனியனே வந்து தொலையேன்! ஏன், என் உயிரை எடுக்கிறாய்? எளவெடுத்த எருமையே வந்து தொலையேன், இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என் உயிரை, உலையில் வைத்துக் கொண்டிருப்பாய்?! என்று பின்புறம் தரையை எக்கி, எக்கிப் பார்த்துக் கொண்டே தன்னைத் தானே திட்டிக் கொண்டே இருப்பாராம். இதைப் பார்த்துக் கொண்டே கடக்கும் இளைஞர்களுக்கு வேண்டுமானால் அது கிண்டலுக்கும், கேலிக்கும் உரிய விஷயமாக இருந்திருக்கலாம். ஆனால் அவரைப் பொருத்தவரை அவரது வாழ்வின் மிகப்பெரிய சிக்கலே அதுவாகத்தான் இருக்கக் கூடும். 

ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கு இந்தப் பிரச்னை இல்லையா? என்று கேட்கக் கூடும்...

இல்லாமலென்ன? நிச்சயம் பெண்களுக்கும் இதனால் நிறையப் பாதிப்பு உண்டு தான். 

பெரும்பாலான பெண்களுக்கு பிரசவ காலங்களில் மலச்சிக்கல் ஏற்படுவது இயற்கையே! அதற்கு ஏற்றாற் போல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விதத்தில் நார்ச்சத்து மிகுந்த உனவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையை பெண்கள் எளிதில் கடக்கலாம். பிரசவ காலங்களில் மேற்கொள்ளும் மிதமான நடைபயிற்சியும் கூட பெண்களின் மலச்சிக்கல் பிரச்னை தீர உதவும்.

Story image

முக்கியமாக டூர் செல்கையில் பலர் கவனித்திருக்கக் கூடும், பெண்களில் பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுவது வழக்கம். காரணம், அவர்களுக்குப் புதிய இடத்தின் தூய்மையைப் பற்றிய அபிப்ராயங்களை மாற்ற முடியாததால், சந்தேகத்தின் காரணமாகவும் அப்படி ஆவதுண்டு. ஒருமுறை என் அம்மாவுடன் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியை ஒருவர், பள்ளி மூலமாக டூர் சென்ற இடத்தில் கழிவறைகள் சுத்தபத்தமாக இல்லாத காரணத்தால் சரிவர இயற்கைக் கடன் கழிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டு முகம் சுணங்கிப் போய் பயணித்திருக்கிறார். இதைக் கண்ட மற்றொரு அறிவியல் ஆசிரியை ஒருவர், ‘அட, என்ன டீச்சர் நீங்க, வரலைன்னா விடுவீங்களா? அதுக்குப் போய் முகத்தை முழநீளத்துக்கு தொங்க விட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க, வரும் போது, போய்க் கொள்ள வேண்டியது தானே! நாங்கெல்லாம் அப்படித்தான்!’ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். உடற்கல்வி ஆசிரியை இவரது கிண்டலில் மேலும் முகம் சிறுத்துப் போனாலும், ‘ஒரு அறிவியல் டீச்சர், பேசற பேச்சா இது?! மாணவர்களுக்கு இதைப் பற்றி விளக்கமாகப் பாடமெடுத்து மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிமுறைகளைச் சொல்லித்தந்து முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டிய ஒருவரே இப்படி இருந்தால், அப்புறம் அவரிடம் பயிலும் மாணவ, மாணவர்களின் கதி எப்படி விளங்குமாம்?!’ என்று பிற ஆசிரிய நட்புகளிடம் புலம்பியிருக்கிறார்.

இன்னும் பலருக்கு உடல் சூடு அதிகமிருந்தால் அப்படிப்பட்டவர்களும் கூட எளிதில் மலச்சிக்கலுக்கு ஆட்படுவார்கள்.

Story image
  • ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எவராயினும் சரி அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப தங்களது உணவுப் பழக்கத்தை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். பாக்கெட் செய்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. உணவில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முப்போஜனமும் வெறும் மாவுச்சத்து நிறைந்த உணவாக மட்டுமே அமைந்து விட்டால் அது உணவின் செரித்தலை கடினமாக்கி மலத்தின் இளகு தன்மையைக் வெகுவாகக் குறைத்து விடும். இது தவறான உணவுப் பழக்கம். மூன்று வேளை உணவிலும் கண்டிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாலட்டுகளாகவோ, சூப்புகளாகவோ, பழச்சாறுகளாகவோ எடுத்துக் கொள்ள மறக்கக் கூடாது.
  • அதோடு காலை எழுந்ததும் காபி, டீ, சத்து பானம், சத்துமாவுக் கஞ்சி என்று எதையாவது எடுத்துக் கொள்வதற்கு முன்பு முதலில் செய்ய வேண்டியது, ஒரு லிட்டர் வெது வெதுப்பான வெந்நீரை சிறிது சிறிதாக முழுதாக அருந்தி முடிப்பது. இப்படிச் செய்வதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை நீர்த்துப் போவதோடு கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும் திறனும் இந்தத் தண்ணீருக்கு உண்டாம். அது மட்டுமல்ல வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவது மலத்தையும் இலகுவாக வெளியேற்றுவதில் முக்கியப் பங்காற்றும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • அதோடு, மூன்று வேளை உணவு எடுத்துக் கொண்ட பிறகும், உணவு அருந்தி 45 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டம்ளர் நிறைய வெந்நீர் அருந்த மறக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் உணவில் இருக்கும் மாவுச்சத்துகள் செரித்தலின் போது மேலும் கெட்டிப்பட்டு மலம் கடினப்படாமல் இலகுத் தன்மையுடன் குடல் பகுதியை வந்தடைய அந்த வெந்நீர் அருந்தும் வழக்கம் உதவும்.
Story image
  • குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னை உண்டு. கைக்குழந்தைகளோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளோ ஓரிரு நாட்கள் சேர்ந்தாற் போல் மலம் கழிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டார்கள் என்றால், அவர்களுக்கு தினமும் இரவு நேரத்தில் ஏழெட்டு காய்ந்த திராட்சையை வெதுவெதுப்பான வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலை ஊறிய பழத்தை நீரோடு சேர்த்துப் பிசைந்து பிழிந்து அருந்தத் தர வேண்டும். கைக்குழந்தைகளுக்கு தோலை வடிகட்டி விட்டு அருந்தத் தரலாம். இந்தமுறை மிகச்சிறந்த பலன் தரும். 
  • கடுக்காய் பிஞ்சை, விளக்கெண்ணெயில் வறுத்து அந்தப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் முதியோர்களின் மலச்சிக்கல் தீரும்.
  • சித்தமருத்துவக் கடைகளில் கிடைக்கக்கூடியது ‘திரிபலா சூரணம்’ (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த பொடி) இதை தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு கப் வெந்நீரில் கலந்து சாப்பாட்டுக்கு முன் வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 
Story image
  • சிலருக்கு சில வகை வாழைப்பழங்கள் உண்டால் சளி பிடித்துக் கொள்ளும். ஆனால் எப்படிப் பட்டவர்களையும் மலை வாழை ஒன்றும் செய்யாது. விலை அதிகம் என நினைப்பவர்கள் எலக்கி அல்லது ராஜவாழை என்ற பெயரில் பழக்கடைகளில் கிடைக்கும் சுண்டுவிரல் தண்டி வாழைப்பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் சாப்பாட்டுக்குப் பின் தினத்துக்கு இரண்டு என்று சாப்பிடலாம். சளித்தொல்லை அற்றவர்கள் எனில் சாதாரண பூவன் வாழைப்பழமே போதும். மிகச்சிறந்த மலமிளக்கி அது! சிலர் நாட்டு வாழைப்பழம் தான் சிறந்த மலமிளக்கி என்பார்கள். பொதுவாக வாழையில் எல்லா வாழையுமே மலமிளக்கி தான். அவரவர் உடல் இயைபுக்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டியது தான்.

மலச்சிக்கலின் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்றால் இப்போதும் கூட சிலர் ஆசனவாயில் சோப்பு வைத்தல், வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய் தடவி ஆசனவாயில் திணித்தல் எனச் சில விபரீதமான கைமருத்துவ முறைகளைக் கையாள்கிறார்கள். இது தவறென்பது மருத்துவர்கள் கணிப்பு. இதனால் ஆசனவாயில் அலர்ஜி ஏற்படவே வாய்ப்புகள் அதிகமாம். அதுமட்டுமல்ல சிலர் மருத்துவரது ஆலோசனையோ, பரிந்துரையோ இன்றி பேதி மருந்துகளைக் கூட குழந்தைகளுக்கு அளித்து விடுகிறார்கள். அது தவறு, குழந்தைகளுக்கு பேதி மருந்து தவருவதென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத இடைவெளியாவது விட வேண்டும் என்பது மருத்துவர்கள் கருத்து. அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட வயதானவர்களுக்கு சிக்கலின்றி மலம் கழிக்கச் செய்யவென்றே ஆசனவாயில் செலுத்தும் வண்ணம் ஒரு விதமான பேதி மாத்திரை மருந்தகங்களில் கிடைக்கும். இது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வாங்கத் தக்கது. குழந்தைகளுக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது.

Story image

குழந்தைகளைப் பொறுத்தவரை தினமும் மறவாமல் காய்ந்த திராட்சையை ஊற வைத்த தண்ணீர் கொடுத்தாலே போதும். மலச்சிக்கல் தொல்லையை எளிதில் கடந்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மலச்சிக்கல் விவகாரத்தில் மற்றொரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் உடலில் இருந்து வெளியேறத் துடிக்கும் அபான வாயுவை அடக்குதல். உடலி இருந்து அபான வாயு வெளியேறுவது தான் நல்லதே தவிர அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்களோ என்ற கவலையில் அதை அடக்குவது ஆரோக்யத்துக்கு உரியதல்ல என்கிறது மருத்துவம். அபான வாயு கண்ட, கண்ட நேரங்களில் பிரிந்து அயலார் முன் மானத்தை வாங்காமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்களானால் வேலா, வேலைக்கு உரிய நேரத்தில் சாப்பிட்டு விடும் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது முக்கியமாகிறது.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்...

  • முருங்கை, பீன்ஸ், தேங்காய், அவரைக்காய், சுரைக்காய், கத்தரிக்காய், சவ், சவ், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், நூல்கோல், புடலை, பீர்க்கை, முட்டைக்கோஸ், கீரை வகைகள் இவை எல்லாமும் நார்ச்சத்து மிக்க காய்கறிகளே!
  • கொய்யா, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், நாட்டு மாதுளை, குடம்புளி, நெல்லி, மாம்பழம், தர்பூசணி இத்யாதி. (இது சூட்டையும் கிளப்பும்)

மேற்கண்ட சாத்வீக வழிமுறைகளை எல்லாம் கையாண்டு மலச்சிக்கலை தூர நிறுத்துங்கள்.

Image courtesy: lankasri news.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.