நேற்று மதியம் அலுவலகத்தில் இருக்கும் போதே அவருக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது என்ற தகவல் எட்டியிருந்தாலும் துக்கத்துக்குப் பதிலாக முதலில் சட்டென நினைவிலோடியது அப்புசாமி, சீதாப்பாட்டி சீரிஸில் பலவிதத் தலைப்புகளில் அதுவரை நான் வாசித்திருந்த புத்தகங்களே! இன்று அவர் மறைந்த நிலையில், ஒரு பத்திரிகையாளராக இருந்தும், நான் ரசித்து, ரசித்து வாசித்த ஒரு எழுத்தாளரை இந்த சென்னையிலேயே இத்தனை வருடங்கள் குப்பை கொட்டியும் இத்தனை வருடங்களில் ஒரு முறையேனும் நேரில் சந்திக்காமலே இருந்து விட்டோமே என்று ஒரு பக்கம் விசனமாக இருந்தது... இப்படி விசனப்படுவது முதல்முறையல்ல, முன்பே சிலமுறை சுஜாதா, அசோகமித்ரன், ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் மறைவின் போது வழக்கமாக அப்படித் தோன்றுவது உண்டு! அது ஓர் உணர்வு!