சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தந்தை வழி உறவினர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் போக்கைப் பொறுத்து, சிறுமியின் தந்தையையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர் காவல்துறையினர். ஏனெனில் ஓமன் முதியவருக்கு மகளை மணம் முடிக்கக் கேட்டு முதலில் அணுகியது பெற்றோரைத்தான். சிறுமியின் தாய் மறுக்கவே, அதன் பின்னரே அவளது உறவினர்களை அணுகி இருக்கின்றனர். சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தின் படி, தன் கணவரின் சகோதரியும், அவளது கணவரும் சேர்ந்து தங்கள் மகளிடம், அந்த ஓமன் முதியவரின் ஆடம்பர வளைகுடா வாழ்வைப் பறைசாற்றும் புகைப்படங்களைக் காட்டி மூளைச்சலவை செய்து சிறிது, சிறுதாக அவளை ஆசைக்குட்படுத்தியே மனமாற்றம் செய்திருக்கிறார்கள்... முதலில் மறுத்த அந்தச் சிறுமி, பிறகு படிப்படியாக அந்த வாழ்க்கையின் மீது ஆசை கொள்ளத் தொடங்கி, பெற்றோருக்கே தெரியாமல், குறிப்பிட்ட தினத்தன்று அவர்களுடன் சென்று அந்த ஓமன் முதியவரை இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளப் வைக்கப்பட்டிருக்கிறாள். திருமணம் முடிந்ததும் சில நாட்கள் சிறுமியுடன் இந்தியாவில் கழித்த முதியவர், முன்னதாகத் தான் ஓமனுக்குச் சென்று, அங்கிருந்து திருமணச் சான்றிதழ்களைக் காட்டி சிறுமியை ஓமனுக்கு அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் கடந்த மாதத்தில் சொன்னபடி விசா ஏற்பாடு செய்து, சிறுமியை ஓமனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஓமனுக்குச் சென்ற சில தினங்களிலேயே தன் தாயைத் தொடர்பு கொண்ட சிறுமி, தன்னால் அங்கே முதியவரின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு இருக்கு இயலாதென்றும், உடனடியாகத் தன்னை ஹைதராபாத்துக்கு அழைத்துக் கொள்ளுமாறும் கூறி அலைபேசியில் கதறவே... தற்போது இந்த விவகாரம் காவல்துறை மற்றும் ஊடகங்கள் வாயிலாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வரை சென்று... அவரை மிகுந்த மனக் கவலைக்கு உட்படுத்தி இருக்கிறது. அவர், உடனடியாக இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஞிடம் எடுத்துச் சென்று ஹைதராபாத் சிறுமிக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.