பொதுவாக விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாளில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் முதல் குட்டிக் குட்டி விநாகயகர் சிலைகள் வரை வரிசையாக சென்னை நகரின் தெருக்களையும், சாலைகளையும் அடைத்துக் கொண்டு கடலிலோ, ஆறுகளிலோ கரைக்க எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த ‘கிரீன் கணேஷா’ வை அப்படிக் கரைக்கத் தேவையில்லை. வீட்டின் முன்னால் மண் தரை இருந்தால் அங்கே ஒரு வாளி நிறைய நீர் நிரப்பி அதில் இந்த விநாயகரை வைத்து விட்டால் போதும் களிமண்ணில், இயற்கை வண்ணங்கள் கலந்து செய்த பிள்ளையார் என்பதால் சில மணி நேரங்களில் சிலை முற்றிலும் கரைந்து விடும். பிறகு அந்த நீரில் மேலும் மண் சேர்த்து அப்படியே உள்ளிருக்கும் விதை பந்துகளோடு தொட்டியிலோ அல்லது பிளாஸ்டிக் வாளியிலோ வளர்க்கத் தொடங்கலாம். ஒரே வாரத்தில் உள்ளிருக்கும் விதை முளைத்து நாம் விரும்பிய செடியோ, மரமோ தளிராக முகம் காட்டத் துவங்கி விடும். விநாயகர் சிலைகளில் இது ஒரு வரவேற்கத் தக்க புதுமையான கண்டுபிடிப்பு தான் இல்லையா?