இந்தச் சமயத்தில் தான் நாம் இந்தச் சமூகத்தை உச்சி முகர்ந்து பாராட்டியாக வேண்டும்! சமூகப் போரளியான சுனிதாவுக்கு ஒருவரும் குடியிருக்க வீடோ, அலுவலகம் அமைத்து செயல்பட இடமோ எதுவுமே தர முன்வரவில்லை. எப்படி முன்வருவார்கள்? இந்தச் சமூகம் தான் எப்போதும் இப்படியானவர்களை கலகக் காரர்கள், ஃப்ராடுகள் என்று முத்திரை குத்தி சந்தேக லிஸ்டில் வைத்து விடுமே! பாதிக்கப்பட்டவர்களை பலிகடாவாக்குவதில் பி.ஹெச்.டி வாங்கிய சமூகமாயிற்றே இது! சமூகத்தை விட்டுத் தள்ளுங்கள்... சுனிதா யாருக்காக களத்தில் இறங்கி போராட விரும்பினாரோ அவர்களே முதலில் இவரை நம்பவில்லை. ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கும் பகுதி, பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்குச் சென்று சுனிதா ‘உங்களுக்கு நான் உதவ வந்திருக்கிறேன்... இந்த அவல வாழ்வில் இருந்து நீங்கள் விடுபட, யாருடைய துன்புறுத்தலும், வற்புறுத்தலும் இன்றி கெளரவமாக உங்களது வாழ்வை உங்கள் இஷ்டப்படி நீங்கள் வாழ நான் ஏதாவது உதவ முடியுமா? சொல்லுங்கள்... நான் உதவுகிறேன். என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்களிடமிருந்து சுனிதாவுக்கு கிடைத்த பதில்கள்... அவமானங்களும், ஏச்சுப் பேச்சுகளும் தான், ஏன் சில பெண்கள் சுனிதாவின் முகத்தில் காறி உமிழக் கூட செய்திருக்கிறார்கள். அத்தனையையும் தாங்கிக் கொண்டு தான் சுனிதா தனது ‘குழந்தைக் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான ‘சிலுவைப் போராட்டத்தை’ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார். அந்தச் சம்பவங்களை சுனிதாவின் வார்த்தைகளாலேயே கேட்டால் தான் இன்னும் வலுவாக இருக்கும். அதற்கான யூ டியூப் விடியோ இணைப்பு கீழே...