தேடல்கள் பலவிதம்!
தற்கொலை விகிதங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதும், சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுவதும், நம்பிக்கைக்கு நம்பிக்கை மாறுபடுவதும் வாழ்வைப்பற்றி இளம்வயதிலேயே ஏற்படும் கண்ணோட்டத்தைப் பொருத்ததாக அமைகிறது.


உச்சியிலிருந்து தொடங்கு-4
சுயமாக மரணத்தைத் தேடிக் கொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் தற்கொலை என்று அறிவித்துவிட முடியாது. தூங்கியவாறே காரை மரத்தில் மோதுபவன் சாக விரும்புவதாகச் சொல்ல முடியாது. வேகத்துடன் தாறுமாறாக வாகனத்தை ஓட்டுபவன் எதிரே வரும் சரக்குந்தில் மோதி உயிரிழந்தால் அதைத் தற்கொலை என்று பட்டியலிட முடியாது. மரணமடைய வேண்டும் என்கின்ற நோக்கமே அதைத் தற்கொலை என்று முடிவு செய்ய வைக்கிறது.
ஒருவர் ஐம்பது வயதில் உச்சத்தில் இருக்கிறார். அந்த நிறுவனத்திற்கே அவர்தான் தலைமை நிர்வாகி. திடீரென நிறுவனம் நொடித்துப் போகிறது. பணியை இழக்கிறார். மிகச்சாதாரண பணிகளே கிடைக்கின்றன. விரக்தியில் வாய்ப்புகளைத் தேடுகிறார். தொடர்ந்து அலைக்கழிப்புகள், நிராகரிப்புகள். கடைசியாக நல்ல பணி ஒன்றிற்கு நேர்காணலுக்குச் செல்கிறார். எதிர்பார்த்த முடிவு இல்லை. வீட்டுக்கு வந்து தூக்கில் தொங்கிவிடுகிறார்.
இதுபோன்றவர்களை மரணம் தேடுபவர்கள்(Death Seekers) என்று கருதலாம். இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பி தற்கொலைக்கு முயல்கிறார்கள். அவர்கள் நோக்கம் சிறிதுநேரமே மரணத்தை நோக்கியதாக இருக்கும். அடுத்த நாளே குழப்பத்திற்குக் கொண்டுபோகும். மறுபடியும் மரணம் பற்றிய மனநிலை தலைதூக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒருநாள் துணிச்சலாக வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள்.
ஏழு வயதான ஒரு குழந்தை. அம்மாவை இழந்துவிடுகிறது. அவனைச் சமாளிக்க முடியாமல் தந்தை, தாத்தா வீட்டிற்கு அனுப்புகிறார். அவனைச் சமாதானப்படுத்த தாத்தா, பாட்டி இருவரும் இறந்துபோன அவன் தாய் சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அம்மாவை நினைத்து நினைத்து ஏங்கும் அந்தச் சிறுவன் தானும் இறந்துபோனால் சொர்க்கத்தில் அம்மாவைச் சந்திக்கலாம் என்று மாடியிலிருந்து குதித்து மரித்து போகிறான். இந்தச் சிறுவனை மரணத்தை பொருட்படுத்தாதவர்கள்(Death ignorers) பட்டியலில் சேர்க்கலாம். அவர்கள் தங்கள் மரணத்தை வாழ்வின் முடிவாகக் கருதுவதில்லை, மாறாக இன்னும் மகிழ்ச்சியான சூழலுக்குத் தாங்கள் செல்லப் போவதாகக் கருதுவார்கள். 1997ஆம் ஆண்டு "சொர்க்கத்தின் வாசல்' என்கிற அமைப்பைச் சார்ந்த 39 நபர்கள் மரணத்திற்குப் பிறகு சுவனபதி அடைவோம் என்கிற நம்பிக்கையில் கூட்டாகத் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்கள் இறந்த பிறகு உயர்ந்த அரசாட்சி கிடைக்கும் என்று ஒப்படைத்தவர்கள்.
சிலர் உடல் நலிவடைந்துபோகும்போது தொல்லையுறுவதைவிட மரணமுறுவது நல்லது என்று கருதுவார்கள். இப்படிப்பட்டவர்களை மரணத்தை முன்வைப்பவர்கள்(Death initiators) என அழைக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மரணத்தை நோக்கி தாங்கள் சென்று கொண்டிருப்பதாக எண்ணி அந்தப் பயணத்தை விரைவுபடுத்துவார்கள். சில நாட்களில் தாங்கள் இறந்து போகப் போவதாக அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அதை உடனே நிறைவேற்றும் விதமாக அவர்கள் முயற்சி இருக்கும்.
ரஷியன் ரெளலட் என்கிற ஒரு விளையாட்டு இருக்கிறது. அதில் சில குண்டுகள் மட்டுமே உள்ள ஒரு ரிவால்வாரின் விசையை நெஞ்சுக்கு எதிராக வைத்து இழுக்க வேண்டும். ஒருமுறை விசையை இழுப்பார்கள். குண்டு இருந்தால் அவர்கள் இறந்துபோவார்கள். இல்லாவிட்டால் தப்பித்துவிடுவார்கள். "ஷோலே'வில் கப்பர்சிங் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டைப்போல. இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மரணமடைய ஓரளவிற்குத் தயாராக இருப்பவர்கள். அதே நேரத்தில் அது 100 சதவீதம் சாவில் முடியும் என்று சொல்ல முடியாது. கவனத்தைக் கவர்வதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மரணத் துணிச்சலாளர்கள் (Death darers). ஆழ்மனத்தில் மரணத்தை ஒளித்து வைத்திருக்கும் சிலர் அவர்களையும் அறியாமல் தங்கள் முடிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்துகளில் ஈடுபடுவார்கள். இதைத் தற்கொலை என்று சொல்ல முடியாவிட்டாலும் உள்நோக்கு மரணம் என்று அழைக்கலாம். கடுமையான நோயின் பிடியில் இருப்பவர்கள் வேண்டுமென்றே சரியாக மருந்து சாப்பிடாமல் இருப்பது இந்த மனக்கோளாறால்தான். அதிகமாக மது அருந்துவது, போதைமருந்து சாப்பிடுவது, ஆபத்தான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது போன்ற செயல்கள் நீண்டகால தற்கொலையின் அடையாளம் என்று கார்ல் மினிங்கர் குறிப்பிடுகிறார். இவையும் ஒருவகையான தற்கொலை என்று கருதினாலும், அவர்களுடைய உண்மையான நோக்கம் இதுகுறித்துத் தெளிவாக இருப்பதில்லை. ஆனால் தொடர்புடையவர்கள் கமுக்கமாகவும், மறைமுகமாகவும், இலைமறைவு காய்மறைவாகவும் தங்களை அறியாமலும் அந்த மரணத்தில் ஒருபங்கை வகிக்கிறார்கள்.
மனஇயல் சாவின் பின்னாய்வு என்கிற அடிப்படையில்தான் தற்கொலை செய்து கொள்பவர்களைக் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சொந்தக்காரர்கள், நண்பர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் கடந்த காலச் சம்பவங்களையும் உரையாடல்களையும் அசைபோட்டு தற்கொலை செய்துகொண்டவரைப் பற்றியத் தகவல்களைத் தெரிவிப்பார்கள். அவற்றைக் கொண்டு எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதுபற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிலநேரங்களில் இப்படிப்பட்ட ஆதாரங்கள் அதிகம் கிடைப்பதில்லை. பெரும்பாலான தற்கொலையாளர்கள் மனநல மருத்துவரிடம் செல்வதே இல்லை. மேலைநாடுகளில் மனநிலை நன்றாக இருப்பவர்கள் கூட பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மனஇயல் வல்லுநர்களிடம் அடிக்கடி செல்வதுண்டு. இந்தியாவில் மனநல மருத்துவர்களும் குறைவு, அவர்களிடம் செல்பவர்களும் சொற்பம். அப்படி யாராவது சென்றால் அவர்களை புத்தி சுவாதீனம் சரியில்லை என்று கருதுகிற பிற்போக்கான நிலை ஒன்று இருக்கிறது. நம் நாட்டில் மனஇயல் மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியவற்றையெல்லாம் மக்கள் கோயில்களுக்குச் சென்று தேங்காய் உடைத்தும், காசுவெட்டிப் போட்டும் சமாதானம் அடைந்து விடுகிறார்கள்.
தற்கொலைக் குறிப்புகளும் பெரும்பாலானோரால் எழுதி வைக்கப்படுவதில்லை. ஏற்கெனவே குற்ற உணர்வில் இருக்கிற சொந்தக்காரர்கள் சோகத்தின் பிடியில் சொக்கிப்போய் சரியான காரணத்தைச் சரிவர அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே தற்கொலை முயற்சி மேற்கொண்டு தப்பித்தவர்களிடம் மேற்கொள்ளப்படுகிற ஆராய்ச்சிகளை வைத்தே பெரும்பாலான ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கும், தற்கொலை செய்துகொள்பவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு புரிதலுக்கும் அப்பாற்பட்டது. அதை எளிமைப்படுத்திவிட முடியாது. தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களின் மனப்போக்குகள், முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வாய்ப்புண்டு.
தற்கொலை விகிதங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதும், சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுவதும், நம்பிக்கைக்கு நம்பிக்கை மாறுபடுவதும் வாழ்வைப்பற்றி இளம்வயதிலேயே ஏற்படும் கண்ணோட்டத்தைப் பொருத்ததாக அமைகிறது.
- தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...