ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகரங்களில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய்? முதியோரை அதிகம் பாதிக்கிறதா?

நுரையீரல் புற்றுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளும் அதுபற்றிய விளக்கங்களும்...

Lung cancer among city people, Does it primarily affect the elderly

காற்று மாசு - IANS

Published On :26 ஜூன் 2026, 11:39 am IST

புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் நுரையீரல் புற்றுநோய் வருமா? முதியோரை அதிகம் பாதிக்கிறதா? புகைப்பிடிப்பதை நிறுத்தினால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாமா?

நுரையீரல் புற்றுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் பி.எஸ். ஷாஜகான்.

புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வரும்

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருந்தாலும், புகைப்பிடிக்காதவர்கள் அல்லது முன்பு புகைப்பிடித்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். மற்றவர்கள் புகைப்பிடிக்கும்போது வெளிப்படும் புகையைச் சுவாசித்தாலும், ரேடான் (radon) வாயு, ஆஸ்பெஸ்டாஸ் சிலிகான் கனிமம், காற்று மாசுபாடு, நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் ஆகியவற்றாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். மரபணு காரணிகள், காசநோய், வைரஸ் தொற்றுகள் போன்ற முந்தைய நுரையீரல் பாதிப்புகளின் விளைவுகளாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம்.

நுரையீரல் புற்றுநோய் மரணத்தை ஏற்படுத்தும், இதற்கு சிகிச்சை கிடைக்கும் நம்பிக்கையில்லை.

மருத்துவத் துறையின் முன்னேற்றங்களால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டாலும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை (radiation) அல்லது கீமோதெரபி (chemotherapy) மூலம் குணப்படுத்த முடியும்.

மேலும், இலக்கு சார்ந்த சிகிச்சைகள் (targeted therapies) மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலச் சிகிச்சை (immunotherapy) போன்ற நவீன மருத்துவ சிகிச்சைகள், புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தாலும் ஆயுள் காலத்தை நீட்டிக்கின்றன.

பல ஆண்டுகளாக புகைப்பிடித்த பிறகு அதை நிறுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.

புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் பயனில்லை என்பது தவறான தகவல். நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனேயே உங்களுடைய நுரையீரல் குணமடையத் தொடங்குகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்திய சில ஆண்டுகளிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதாவது தொடர்ந்து புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்துடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிப்பதை நிறுத்துவது புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும். நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. தொடர்ந்து காலம் செல்ல இந்த அபாயம் தொடர்ந்து குறைந்துகொண்டே செல்கிறது.

நுரையீரல் புற்றுநோய், முதியவர்களை மட்டுமே பாதிக்கிறது

வயது அதிகரிக்கும்போது ஆபத்து அதிகரிப்பதும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு அதிகம் கண்டறியப்படுவதும் உண்மைதான். எனினும் நுரையீரல் புற்றுநோய் எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக மரபணு மாற்றங்களால் ஏற்படும் சில வகையான நுரையீரல் புற்றுநோய்கள், இளம் வயதினருக்கும், புகைப்பிடிக்காதவர்களுக்கும்கூட கண்டறியப்படுகின்றன. அதனால் புகைப்பிடித்தவர்கள், புகைப்பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எந்த வயதினரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மாசு அதிகமுள்ள நகரத்தில் வாழ்வது, தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதற்குச் சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பாக நகரங்களில் வாழ்வது ஆபத்தானதுதான். ஆனால் புகைப்பிடித்தலுடன் ஒப்பிடும்போது காற்று மாசால் ஏற்படும் பாதிப்பு குறைவுதான்.

காற்று மாசுபாடு, நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதனால் ஆயிரக்கணக்கான நச்சு வேதிப்பொருள்கள் நேரடியாக நுரையீரலுக்குள் செல்கிறது. அது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அறிகுறிகள் தெரியும்வரை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய முடியாது, அறிகுறிகளுக்குப் பிறகு புற்றுநோய் மோசமடைகிறது.

குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட சிடி ஸ்கேன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதன் மூலமாகவே நோயின் பாதிப்பைக் கண்டறிய முடியும். அதாவது அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாகவே நுரையீரல் புற்றுநோயின் பாதிப்புகள் தெரியும்.

நீண்ட காலமாக புகைப்பிடிக்கும் 50 முதல் 80 வயதுக்குள்பட்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ளதால் அவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாக ஆரம்பக் கட்டத்திலேயே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிந்தால் சிகிச்சையின் மூலமாக குணப்படுத்த முடியும்.

தமிழில்: எம். முத்துமாரி

Summary

Lung cancer among city people, Does it primarily affect the elderly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.