- உண்ணிகிருஷ்ணன் எஸ்
ஹோட்டல்களில், விழாக்களில் சாப்பிடுவதனால் மட்டுமின்றி வீடுகளில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் 'ஃபுட் பாய்சன்' எனும் 'உணவு நஞ்சாதல்' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாக்டீரியா, வைரஸ்கள் உணவில் எப்படி பரவுகிறது? ஏன் பாதிப்புகள் ஏற்படுகிறது? என்பது பற்றி பார்க்கலாம்...
இன்றைய காலகட்டத்தில் ஹோட்டல்களில் விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதால் உடல்ரீதியாக பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாகக் கடைகளில் விற்கப்படும் துரித (ஃபாஸ்ட் ஃபுட்), பொருந்தா (ஜங்க் ஃபுட்) உணவுகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று தொடர்ந்து மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் சமைத்த உணவுகளையேச் சாப்பிடவும் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், வீடுகளில் சமைத்த உணவுகளினாலும் வயிற்றில், குடலில் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உணவைச் சரியாக சமைக்காததாலோ, கைகளில், உணவுப் பொருள்களின் மூலமாக உணவில் பாக்டீரியாக்கள், கிருமிகள் கலந்தாலோ, உணவைச் சரியாக பக்குவப்படுத்தாமல் சாப்பிட்டாலோ பாதிப்புகள் ஏற்படலாம்.
வீடுகளில் சமைக்கும் உணவைச் சாப்பிடுவதனாலும் 'ஃபுட் பாய்சனிங்' எனும் உணவு நஞ்சாவது அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது ஹோட்டல்களில் அல்லது ஒரு பொது இடத்தில் மட்டுமின்றி வீடுகளில் சமைக்கும் உணவுகளிலும் தொற்றுகள் இருக்கலாம், அதனால் பாதிப்பும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
வீட்டில் சமைத்த உணவு இயல்பாகவே பாதுகாப்பானது என்ற பொதுவான மாயை இருந்து வருகிறது. ஆனால் அதிகமாக உணவைச் சமைத்து, மீதமுள்ள உணவை வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது, பிரிட்ஜில் வைத்து தொடர்ந்து சாப்பிடுவது என சிறிய விஷயங்களே மிகப்பெரிய பாதிப்பை ஏறப்டுத்துகின்றன.
இதனால் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உணவில் உருவாகி பல மடங்கு பெருகுகிறது. இதனைச் சாப்பிட்டவுடன் நம் உடலுக்குள் பல்வேறு நச்சுகளை உருவாக்குகிறது. உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான அசைவ உணவுகள் சரியாக கையாளப்படுவதில்லை என்றும் அதன் மூலமாக அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ENS
உணவு நஞ்சாதல் - காரணங்கள் என்ன?
செங்காணூர் டாக்டர் கே.எம். செரியன் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் அனுபாமா நாயர் இதுபற்றி கூறுகையில்,
"உணவுப் பாதுகாப்பு என்பது இனி ஹோட்டல்களில் உள்ள பிரச்னை மட்டுமல்ல. வீடுகளிலும் நடக்கிறது, ஏன், பள்ளிகளுக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து வழங்கப்படும் உணவுகளிலும் உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுத் தொற்றுகளுக்கு 60% வீட்டில் சமைக்கும் உணவுகளே காரணம். இரவு மீதமுள்ள சாதம், சரியாக வேகவைக்காத முட்டைகள், நன்றாக கழுவப்படாத பழங்கள் ஆகியவற்றின் மூலமாக ஏற்படுகிறது. இன்றைய பெண்கள், பாரம்பரிய சமையல் முறைகளைத் தவிர்த்து மிக விரைவாக நவீன சமையல் முறைக்கு மாறுவதும் ஒரு காரணம்.
மாறிவரும் வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள், சமைக்கப்படாத உணவுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்த மக்களின் அலட்சியம் ஆகியவற்றால் இந்தப் பிரச்னை மேலும் சிக்கலாகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அசுத்தமான குடிநீர் முதல் சரியாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகள் வரை என நோய்பரவல்களுக்கு காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை கூறுகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கண்காணிக்காமல் இருப்பதையே இது காட்டுகிறது.
மலப்புரம் எம்.இ.எஸ். மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் புருஷோத்தமன்,
"நவீன வாழ்க்கை முறை நம் வாழ்க்கையை ஆபத்தானதாக மாற்றுகிறது. சாலைகளில் தூசியில் கிடக்கும் வெட்டப்பட்ட பழங்களை வாங்கிச் சாப்பிடுகிறோம். புதிய இடங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம். அது பாதுகாப்பானதா என்று யாரும் யோசிப்பதில்லை. மக்கள் ஷிகெல்லாவை ஒரு சாதாரண வைரஸ் என்றும் அது வயிற்றுப்போக்கை மட்டுமே ஏற்படுத்தும் என்று என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் கேரளத்தில் நாம் பார்த்தது, ஷிகெல்லா சோனி போன்ற வைரஸ்கள் உயிருக்கே ஆபத்தமாக முடியக் கூடும்" என்று எச்சரிக்கிறார்.
உணவு மூலம் பரவும் நோய் என்பது ஒரு சிறிய பிரச்னை அல்ல, மாறாக அது ஒரு தீவிரமான மருத்துவ அச்சுறுத்தல். குடும்பங்களில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் இது ஏற்படுத்துகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு அவரவர் குடும்பத்தினருக்கு, பாசத்துடன் சமைக்கும்போது அந்த உணவு பாதுகாப்பானது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பாதிப்புகள் என்ன?
உணவு நஞ்சாகும்போது ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிடுவது, உணவு சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்துவது, 'அதுவாகவே சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையில் இருப்பது ஆகியவை முற்றிலும் தவறானது. உண்மையில் உணவு நஞ்சாவது என்பது மிக நுண்ணிய அளவில் உடலில் பாதிப்புகளை உண்டாக்கி நீண்ட காலத்திற்கு தொடரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உணவு நச்சுத்தன்மையால் ஒருவர் கடுமையாகப் பாதிக்கப்படும்போது அவருடைய உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். அதனைச் சரிசெய்வதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ்ஹெல்த் நிறுவனத்தின் இரைப்பைக் குடல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அஜித் கே நாயர், "உணவின் மூலமாக ஏற்படும் தொற்றுகள் பெரும்பாலும் தானாக குணமாகக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவாக இருந்தாலும் சில சமயங்களில் கடுமையான நீரிழப்பு, பாக்டீரியா தொற்று பரவல் போன்ற மோசமான நிகழ்வுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். உணவு சாப்பிட்ட பிறகு பல மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும் என்பதால் இதற்குக் காரணமான உணவைக் கண்டறிவது கடினமாக உள்ளது. அதனால் வீட்டில் இருந்தே மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல" என்கிறார்.
வயதானவர்கள், பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, கண்காணிப்பு என்பது அவசியம் என்கிறார் பெங்களூர் ஆஸ்டர் வைட்ஃபீல்ட் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சுசிஸ்மிதா ராஜமான்யா.

ENS
அதேபோல பெங்களூர் ஆஸ்டர் ஆர்.வி. மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் அதிதி பிரசாத், குணமடைதல் என்பது ஒரு போர் நிறுத்தம் போன்றது. பாதிக்கப்பட்ட செரிமான அமைப்புக்கு அந்த நேரத்தில் எளிமையான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதாவது சூப், தயிர் சாதம், கிச்சடி என எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். காரமான, கொழுப்பு நிறைந்த, திட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் நினைப்பதுபோல உணவு நஞ்சாதல் என்பது வயிற்று வலியுடன் எப்போதும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. இது உங்கள் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யலாம். குடல் சம்பந்தமான எந்த அறிகுறிகளையும் காட்டாது. சில சமயங்களில், உணவு சாப்பிட்ட, சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகுகூட பாதிப்பு உருவாகலாம்" என்கிறார்.
ஆபத்தான உணவுகள்
கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி - குறிப்பாக, சரியாக வேகவைக்காதபோது அல்லது பாதி வேகவைக்கும்போது...
பெரிய அளவிலான விழாக்களில் பல மணி நேரங்களாக வைத்திருக்கும் உணவுகள்...
கோடைக்காலத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள்
ஓடுடைய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிற கடல் உணவுகள்
சாலையோரக் கடைகளில் முன்பே வெட்டி வைக்கப்பட்ட பழங்கள்
அறை வெப்பநிலையில் இரவு முழுவதும் வைக்கப்பட்ட சாதம் ஆகியவற்றைச் சாப்பிடும்போது தொற்றுகள் ஏற்படலாம்.
தொற்றுகளும் பாதிப்பும் பரவும் விதமும்...
சால்மோனெல்லா (Salmonella): உணவு உட்கொண்ட பிறகு இந்த பாக்டீரியா பல மடங்கு பெருகுகிறது. சரியாக வேகவைக்கப்படாத இறைச்சி, கலப்பட உணவினால் உருவாகிறது.
ஈ. கோலை (E - coli): ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குழந்தைகளுக்கு சிறுநீரக செயலிழப்பைத் தூண்டலாம். அசுத்தமான நீர், கழுவப்படாத காய்கறிகள், சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியில் உருவாகும்.
ஷிகெல்லா சோனி (Shigella sonnei): இதனால் வயிற்றுப்போக்கு மட்டும்தான் என்று தவறாகக் கருதினால் மரணத்தைக்கூட ஏற்படுத்தும். உடனடியாக மருத்துவரை அணுகி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டெஃபிளோகாக்கஸ் (staphylococcus): மீண்டும் சூடுபடுத்தினாலும் இந்த நச்சுகள் உயிர்வாழும். கைகளில் புண்கள் இருந்தால் அவற்றின் மூலமாக உணவில் நுழைகிறது.
கிளாஸ்ட்ரிடியம் போட்யூலினம் (Clostridium botulinum): வயிற்றுப்போக்கு இருக்காது, பக்கவாதம் ஏற்படும். அசுத்தமான தேனில் காணப்படுகிறது
கடல் நச்சுகள்: சிப்பி மீன்கள், பஃபர் மீன்கள் மூலமாக வரும். நரம்பியல் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மெதுவான நச்சுகள் (Slow poisons)
அஃப்லாடாக்சின் (Aflatoxin): அசுத்தமான நிலக்கடலையால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு. கல்லீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது
லாத்திரிசம் (Lathyrism) : கேசரி பருப்பு - நிரந்தர கால் பலவீனம் ஏற்படும்.
மினமாட்டா (Minamata): பாதரசம் கலந்த மீன் - மீளமுடியாத நரம்பியல் பாதிப்பு ஏற்படும்.
எனவே, நாம் வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்று அலட்சியமாக இருக்காமல் நன்றாக சமைத்த, பாதுகாப்பான உணவுகளைச் சாப்பிடுகிறோமா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.
அதேபோல வீட்டில் சமைப்பவர்களும், 'வெறுமனே சமைக்கிறோம்' என்றில்லாமல் தங்களுடைய குடும்பத்தினருக்கு கலப்படமில்லாத, கெட்டுப்போகாத பாதுகாப்பான உணவைச் கொடுப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
தமிழில்: எம். முத்துமாரி
Summary
Even home-cooked food is not safe, home-cooked meals can land you in hospital
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










