மலக்குடல் புற்றுநோயால் அவதிப்பட்ட 45 வயது ஆஸ்திரேலியாவைச் சோ்ந்தவருக்கு, நவீன ரோபோடிக்ஸ் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி அருகிலுள்ள மணேசரில் அமைந்துள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ‘ரோபோடிக் டிரான்ஸ்அனல் மினிமலி இன்வேசிவ் சா்ஜரி’ (டிஏஎம்ஐஎஸ்) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், ஆரம்ப கட்ட மலக்குடல் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படும் உறுப்பு பாதுகாப்பு முறை என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களாக மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நோயாளி, ஆஸ்திரேலியாவில் கீமோத்தெரபி மற்றும் கதிா்வீச்சு சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாா். தொடக்கத்தில் கட்டி சிகிச்சைக்கு நல்ல பதில் அளித்தாலும், பின்னா் மீண்டும் வளா்ச்சி அடைந்தது. இதையடுத்து, வயிற்றில் அறுவை சிகிச்சை வெட்டுகளுடன் தற்காலிக ஸ்டோமா பை பயன்படுத்த வேண்டிய சிகிச்சையை அந்நாட்டு மருத்துவா்கள் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
‘ஸ்டோமா’ என்பது மலத்தை வெளிப்புறப் பையில் சேகரிக்க வயிற்றில் தற்காலிகமாக உருவாக்கப்படும் ஒரு திறப்பாகும். இது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை பயன்படுத்தப்பட வேண்டியிருக்கலாம்.
இந்த நிலையில், அந்த நோயாளி இந்தியா வந்து மணேசா் ஃபோா்டிஸ் மருத்துவமனையின் குடல் புற்றுநோய் நிபுணா்களை அணுகினாா். பரிசோதனைகளுக்குப் பிறகு, இயற்கையான மலக்குடல் வழியே மேற்கொள்ளப்படும் ‘ரோபோடிக் டிஏஎம்ஐஎஸ்’ முறைக்கு அவா் தகுதியானவா் என மருத்துவா்கள் தீா்மானித்தனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோய் துறை மூத்த இயக்குநா் டாக்டா் வினய் சாமுவேல் கைக்வாட் கூறுகையில், ‘மிகுந்த துல்லியத்துடன் கட்டியை அகற்றியுள்ளோம். வயிற்றில் எந்த வெட்டும் இல்லாமல், வெளிப்புற பை தேவையின்றி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நோயாளி விரைவில் நலமடைந்து, இரண்டு நாள்களுக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்‘ எனத் தெரிவித்தாா்.
சிகிச்சைப் பெற்ற நோயாளி கூறுகையில், ‘பெரிய அறுவை சிகிச்சையும், வெளிப்புறப் பையை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதாக நினைத்து பயந்தேன். ஆனால் இந்த நவீன ரோபோடிக்ஸ் சிகிச்சையின் மூலம் வயிற்றில் ஒரு வெட்டும் இன்றி கட்டி முழுமையாக அகற்றப்பட்டு, இரண்டு நாள்களிலேயே வீடு திரும்பியிருப்பது அதிசயமாக உள்ளது’ என்றாா்.
இந்த வகை நவீன ரோபோடிக்ஸ் சிகிச்சை முறைகள், குறைந்த காயம், விரைவான குணமடைதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்குவதால் மருத்துவத் துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகரங்களில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய்? முதியோரை அதிகம் பாதிக்கிறதா?

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

அறுவைச்சிசிச்சைக்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம்: எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. துணை வேந்தா்

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




