எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

'விரைவில் ஆதாரங்களை தருவேன்’ தொடரும் கெளதம் மேனன் கார்த்திக் நரேன் சர்ச்சை!

கெளதம் மேனன் கடந்த சில நாட்களாக கடுமையான சர்ச்சைகளிலும் விமரிசனங்களிலும் சிக்கியுள்ளார்.  

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:36 pm

சினேகா

கெளதம் மேனன் கடந்த சில நாட்களாக கடுமையான சர்ச்சைகளிலும் விமரிசனங்களிலும் சிக்கியுள்ளார். அவரது நெருங்கிய வட்டமே அவர் மீது கோபமாக இருக்கும் நிலையில் அவர் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என கோலிவுட்டே பரபரப்பாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் - நரகாசுரன். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  ஏற்பட்டுள்ள விரிசல் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரகாசுரன் படத்துக்காக தன்னுடைய பணத்தைச் செலவு செய்ததால் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாமல் உள்ளேன் என்று கெளதம் மேனனுக்கு எதிராகப் பேட்டியளித்திருந்தார் கார்த்திக் நரேன். கெளதம் மேனனும் பதிலுக்கு ட்விட்டர் மூலமாக மறைமுகமாக பதில் சொன்னார் கெளதம் மேனன்.

தொடர்ந்து இது குறித்து அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரவே அதற்கு முற்றுப் புள்ளி வைக்க ட்விட்டரில் விளக்கம் அளித்தார் கெளதம் மேனன்.

'கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதுகுறித்து ஊடகங்களிலிருந்து தொடந்து அழைப்பு வந்ததால் அதனால் தனையடைந்தேன். அதனால்தான் என் பதிலை ட்விட்டரில் தெரிவித்தேன். அதை நான் செய்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அதற்காக கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

Story image

நரகாசுரன் படப்பணிகளில் கார்த்திக்குக்கு எல்லாவிதமான சுதந்தரங்களும் அளிக்கப்பட்டன. அதிகச் சம்பளத்துக்கு அவர் கேட்ட நடிகர்களை அழைத்து வந்தோம். மாசிடோனியா சென்று படத்தின் பின்னணி இசை வேலைகள் நடந்தன. என் மூலமாக வந்த மூதலீட்டாளர்களின் வழியாகப் படத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம். இதன் வியாபாரத்தைக் கொண்டு இதைவிடவும் 7 மடங்குப் பெரிய படமான துருவ நட்சத்திரம் படத்துக்குச் செலவு செய்திட முடியாது. அப்படத்தை வேறொருவர் தயாரிக்கிறார். நரகாசுரன் படத்தின் லாபத்தில் 50 சதவிகிதத்தை நான் கேட்கவில்லை. இந்தப் படத்தில் எனக்குப் பங்கு இல்லை என எனக்குத் தெரியும். நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் நினைத்தால் சந்தோஷமாக அதைச் செய்வேன். ஏனெனில் அப்போது படத்தின் மீதான பொறுப்பு என்னிடம் இருக்காது. 

Story image

கார்த்திக்கின் பதற்றத்தையும் புலம்பலையும் புரிந்து கொள்கிறேன். பொறாமை பிடித்த மனிதர்களின் தவறான தகவல்களாலும் திரையுலககின் வணிகம் எப்படி இயங்குகிறது என்பது குறித்து அவருக்குத் தெரியாததாலும் உண்டானவை அந்த உணர்வுகள். படத்தின் வெளியீட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பரணில் வைப்பதற்காகப் படம் தயாரிக்கவில்லை. துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்குப் பயணம் உண்டு. நடிகர்களின் கால்ஷீட் எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம்.  

துருவநட்சத்திரம் படத்துக்கு 70 நாள்களும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு 45 நாள்களும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இரண்டிலும் பெரிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த வருடம் விரைவில் வெளியாகும். இரண்டு படங்களையும் வேறு நபர்கள் தயாரிக்கிறார்கள். இரண்டிலும் எவ்விதப் பிரச்னையும் இல்லை. 

Story image

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்துடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. கதையைக் கேட்டு அதை எஸ்கேப் ஆர்டிஸ் மதனுக்கு அனுப்பி வைத்தேன். நான் அப்படத்தின் தயாரிப்பாளர் அல்லர். பங்குதாரரும் அல்லர். படத்திலும் அதன் போஸ்டரிலும் என்னுடைய பெயர் இருக்கவேண்டும் என்று மதன் விரும்பினார். ஆனால் அதனுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இனி இல்லை. அதை நான் ஆரம்பித்து வைத்தேன். அவ்வளவுதான். அதற்காக போஸ்டரிலும் என் பெயர் இடம்பெற வேண்டியதில்லை. செல்வராகவன் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அருமையாக உள்ள இந்தப் படமும் விரைவில் வெளியாகும். 

சமீபகாலமாக எந்தப் படமும் காணாத சிக்கல்களை ஒன்றும் நரகாசுரன் காணவில்லை. எல்லாத் தயாரிப்பாளர்களும் இதை எதிர்கொண்டுள்ளார்கள். ஒரு படக்குழு நன்றாக வேலை செய்கிறபோது அதைக் கீழே பிடித்து இழுக்க யாரோ ஒருவர் முயற்சி செய்வார். அதுதான் இது. படத்தின் வேலைகளை முடிப்பதற்கும் பட வெளியீட்டுக்கும் நாங்கள் திட்டங்கள் வைத்துள்ளோம். அடுத்தச் சில நாள்களில் எல்லாப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும்.

Story image

கார்த்திக் தன்னுடைய அடுத்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அவருக்கு எல்லாச் சுதந்தரமும் உண்டு. அவரும் அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். நரகாசுரன் படத்தைச் சரியான சமயத்தில் வெளியிடவேண்டும் என்று விரும்புகிறோம். முழுச் சம்பளத்தையும் அளிக்காததால் டப்பிங் பேச மறுத்த அரவிந்த் சாமி, அதற்கான தேவையைப் பூர்த்தி செய்தபிறகு விரைவில் அதன் பணிகளை முடிப்பார்.

Story image

எனக்கும் கார்த்திக்குக்கும் இடையிலான இந்தக் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விட்டன. படம் விரைவில் வெளிவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்’ என்று கூறினார் கெளதம்.

கெளதம் மேனனின் இந்த தன் விளக்கம் முழுமையாக இல்லை. அவரது தரப்பை காத்துக் கொள்வதில் போதியளவு இல்லையென்பதால் இயக்குநர் கார்த்திக் நரேன் மேலும் அழுத்தமாக தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். நரகாசுரன் பட ரிலீஸ் தாமதற்கு தெளிவான விளக்கத்தை கேட்டுள்ளார். இது தவிர நெஞ்சம் மறப்பதில்லை, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களின் நிலை என்ன என்பதை சொல்லியாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

கெளதம் மேனனின் இந்த விளக்கம் திருப்தியளிக்காத நிலையில் கார்த்திக் நரேன் கடுப்பானார். அரவிந்த சாமி சம்பள பாக்கியால் டப்பிங் பேசுவதில்லை என்று கெளதம் மேனன் கூறுவது சப்பைக் கட்டு. அரவிந்த சாமியால் தான் தன்னால் படப்பிடிப்பையே முடிக்க இயன்றது. கெளதம் மேனின் இந்தப் பிரச்னையில் மேலும் சில ஆதாரங்களை திரட்டி விரைவில் வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார் துருவங்கள் 16 இயக்குநர்.

2-வது படம் இத்தனை சர்ச்சைகளுடன் இன்னும் வெளிவராத நிலையில், தனது 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். அப்படத்துக்கு நாடக மேடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சினிமா உலகம் ஒரு நாடக மேடை, இங்கு இயக்குநர்கள் உட்பட அனைவரும் நடிகர்களே என்பதை சொல்லாமல் சொல்கிறாரா கார்த்திக் நரேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.