டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் என்ன இருக்கிறது என்று பார்த்துத்தான் சாப்பிடுகிறீர்களா?

க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா ஆகிய உணவுகளை அடிக்கடி

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

ராகவி

நம்மில் பலர் சாப்பிடுவதை ஒரு கடமை போல செய்வார்கள். இன்னும் சிலர் அவசர அவசரமாக வெந்ததையும் வேகாததையும் சாப்பிடுவர். சிலர் வெறும் டீ காபி குடித்தே உயிர் வாழ்கிறார்கள். இப்படி நமக்கு நாமே பல கெடுதல்கள் செய்து கொண்டு அதன் பின் மருத்துவமனையில் தஞ்சம் அடையும் போது உடல் நம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றிருக்கும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று முன்னோர்கள் இது போன்ற செயல்களைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

நம் உயிரை பாதுகாக்கும் நம் உடலை வளர்க்கும் உணவை நாம் எந்தளவுக்கு போற்ற வேண்டும்? ஆனால் நாம் என்ன செய்கிறோம். போற்றாவிட்டால் கூட பரவாயில்லை அவசர வாழ்க்கையில் உணவையும் சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். கிட்டத்தட்ட எல்லா மதத்திலும் சாப்பிடுவதற்கு முன் ஒரு சில நொடிகளாவது கண்களை மூடி இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உணவை சாப்பிடத் தொடங்குவது வழக்கம். காலப்போக்கில் நல்ல பழக்கங்கள் மறைந்துவிட்டாலும், உணவு குறித்த விழிப்புணர்வு அருகிக் கொண்டு வருவதும் சோகம்.

தினமும் தட்டில் உணவு பரிமாறப்பட்ட பின்னர் வேறு எந்த சிந்தனைக்கும் ஆட்படாமல் அந்த உணவும் நீங்களும் மட்டுமே பிரதானம் என்று நினைக்கவேண்டும். உணவு சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது. சிலர் புத்தகங்கள் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டே அல்லது மொபைல் ஃபோனை பார்த்துக் கொண்டோ ஏனோ தானோவென்று சாப்பிடுவார்கள். அது தவறு. சிலர் சாப்பிடும் போது கோழி விழுங்குவதைப் போல அவசர அவசரமாக மொத்த உணவையும் விழுங்கி வைப்பார்கள். இதுவும் தவறு. இதனால் அவர்கள் உணவுடன் சேர்த்து காற்றை வயிற்றுக்குள் அனுப்புவதால் வயிறு உப்புசம் அடையும்.  நம் தட்டில் உள்ள உணவை நம் முழு கவனத்துக்கு கொண்டு வந்து, மெள்ள சுவைத்து ரசித்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவு உடலுடன் சேர்ந்து அதற்குரிய பலன்களை முழுமையாகத் தரும். நம் வாய் என்ன அரவை மெஷினா என்ன? உணவை அரைத்து வயிற்றுக்குள் தள்ள? உணர்வுடன் செய்யப்படும் போது அதற்குரிய பலன் இருக்கும்.

Story image

உடலின் நீர்ச்சத்து எப்போதும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு திரவ உணவும் சரிசதவிகிதம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வயிற்றில் பிரச்னைகள் உண்டாக்கி, வீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

சிலருக்கு வாயுக் கோளாறுகள் இருக்கும். உருளைக் கிழங்கு, துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பன்னீர், சீஸ் போன்ற கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் சாப்பிட்டுவிட்டால், நீராக கரைத்த மோரில் சிறிதளவு சீரகப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து குடித்தால் வயிற்றில் சேர்ந்த வாயு வெளியேறி வீக்கம் குறையும்.

க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். எனவே இவற்றை தவிர்த்து காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

வேலை நேரத்தில் சிறுநீர் வரும்போது சிலர் அப்புறம் போகலாம் என்று அடக்கிக் கொள்வார்கள். இது தவறு. சீரான இடைவெளியில் தவறாமல் சிறுநீர் அல்லது மலத்தை வெளியேற்றாமல் இருந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.

Story image

மனத்தை லகுவாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத டென்ஷன், சண்டை என கோபமாக இருக்கும் போது அது மன அழுத்தத்தில் போய் முடியும். இதனால் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் பாதிப்படையும். உளப் பிரச்னை உடல் பிரச்னையாக மாறி முதலில் பாதிப்படையும் உறுப்பு வயிறு தான். மன அழுத்தம் ஏற்பட்டால் உணவில் நாட்டமில்லாமல் போகும். நேரம் தவறி உணவினை உட்கொள்ளுதல் அல்லது அதிகப்படியான உணவினை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் ஏற்பட்டு, அது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தினமும் காலை அல்லது மாலை ஒரு மணி நேரமாவது யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்றாலும் வயிறும் பிரதானமான ஒரு உறுப்பு என்பது உண்மைதானே? இவ்வளவு உழைப்பும், ஓட்டமும் எதற்காக? அரை சாண் வயிற்றுக்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே வயிற்றை குப்பைத் தொட்டியாக பாவித்து கண்ட உணவை எல்லாம் உள்ளே தள்ளாமல் உடல் ஆரோக்கியத்துக்கான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நெருங்காது. உடலைப் பாதுகாத்தால் உயிர் பாதுகாக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.