கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், தான் தத்தெடுத்த மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி, சரியாகச் சாப்பிட மாட்டேன் என்கிறாள், பால் அருந்த மறுக்கிறாள் என்ற காரணத்துக்காக அவளை தனது வீட்டின் வெளியில் உள்ள தோட்டப்பகுதியில் மரத்தினடியில் தனியாக நிற்க வைத்து தண்டனை அளித்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டிருக்கிறார். சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தால், குழந்தையைக் காணோம். இன்று வரையிலும் அந்தச் சிறுமி கிடைத்தபாடில்லை. மூன்றே வயது நிரம்பிய சிறுமியை, யாராவது அப்படி இரவு நேரத்தில் வீட்டின் வெளியில் தனியாக நிற்க வைத்து விட்டுச் செல்வார்களா? அமெரிக்காவின் வீட்டுத் தோட்டங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அங்கெல்லாம் வீட்டின் பின்புறத் தோட்டங்கள் எனில் அவை மினி காடுகள் போல அளவில் பிரமாண்டமானவை என்று பலர் சொல்லக் கேள்வி! இரவுகளில் கரடிகள் நடமாட்டம் கூட இருப்பதுண்டு என அரசு எச்சரிக்கை எல்லாம் செய்யும் என்று கூட உறவினர்கள் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான சூழலில் அதிலும் தத்துச் சிறுமியை மிரட்ட வேண்டிய அவசியமென்ன? அந்தச் சிறுமி ஒரு மாற்றுத்திறனாளி என்று வேறு சொல்லப்படுகிறது. இப்படி சின்னஞ்சிறு விஷயங்களுக்காகவெல்லாம் அறியாக் குழந்தைகள் சிரமத்துக்கு உள்ளாக்கப்படும் போது அந்தச் செய்திகள் வாசகர்களை மிகுந்த கொதிப்புக்கு உள்ளாக்குகின்றன.