எங்களுக்கு ஃபேஸ் புக் அக்கவுண்ட் இருக்கிறது. அடிக்கடி செல்ஃபீ பதிவேற்றுவோம், நேரமிருக்கிறதோ, இல்லையோ சோஷியல் மீடியாவில் செலவிடுவதற்காக அங்கே, இங்கே பிய்த்துப் பிடுங்கியாவது நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு எங்களதும், நண்பர்களதுமான செல்ஃபீ புகைப்படங்களை ஆவலாகத் தொடர்ந்து கண்காணித்து ரசித்து லைக்ஸ் போட்டு கொண்டாடுவோம் என்கிறீர்களா? ஆமாமெனில்நீங்கள் அறிந்து கொள்ளத் தான் இந்தச் செய்தி. நீங்கள் தீவிர செல்ஃபீ பிரியர்களாக இருப்பது உங்களது சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை குறைபாட்டின் அறிகுறியாம். இது அடிக்கடி ஃபேஸ்புக்கில் மூழ்கும் போது பார்த்துக் காண்டாகி சபிக்கும் அப்பாக்களின் கருத்து எனில் ’அட... இந்தக் கருத்து கந்தசாமி, குப்புசாமி, கோபால்சாமிகளுக்கு வேறு வேலை இல்லை’ என்று கடந்து போய் விடலாம். ஆனால் இது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப் பட்ட செய்தி என்பதால் சற்றுக் கவனித்து செல்ஃபீ விசயத்தில் நிதானிப்பது நல்லது.