அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படக் கதையின் மையக் கருத்து, மல்யுத்த வீரரான ஒரு அப்பா தனது 4 மகள்களுக்கும் சமூகத்தின் முகச் சுளிப்பையும், எதிர்ப்புகளையும் மீறி மல்யுத்தம் கற்றுத் தந்து அவர்களை சர்வ தேச சாம்பியன்களாக ஆக்குவது தான். ஆண்களின் விளையாட்டென அதுவரை நம்பப் பட்ட ஒன்றை இல்லாமலாக்கி தனக்கு ஆண்குழந்தை இல்லையே என்று அது வரையிலிருந்த ஏக்கத்துக்கு சிறந்த பதிலடி தருகிறார் இந்த அப்பா. ‘டங்கல்’ வெளியாகி சில நாட்கள் தான் ஆகின்றது. படத்துக்கு இந்தியா முழுதும் நல்ல வரவேற்பு. படம் தத்ரூபமாக அமைய நிஜ வாழ்க்கைக் கதையைத் தேர்வு செய்ததால் படத்தின் 50 % வெற்றியை இந்த நிஜத் தன்மையே சாதித்து விட்டது. மிச்ச 50 % துக்கு அமீர் இருந்தார், நல்ல திரைக்கதை இருந்தது, உடன் நடித்த நடிகர்களின் திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. படத்தில் அமீரின் கதாபாத்திரம் தான் மகாவீர் சிங் போகத், அவரது மகள் கீதா போகத்தாக வேறொரு இந்தி நடிகை நடித்திருந்தார். ஆனால் கீதாவின் புகைப்படங்களைக் காணும் போது இவரையே நடிக்க வைத்திருக்கலாமே என்று தான் தோன்றுகிறது.