மேக்கேதாட்டு விவகராத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை விட்டிருந்த நிலையில், இந்த மலிவான அரசியல் வேண்டாம் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சொல்லியதற்கு கடும் கண்டன் தெரிவித்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் திமுக தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.
காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் விஜய் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.
இப்போதாவது - இதற்காகவாவது தமிழக முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மலிவான அரசியல் வேண்டாம் என கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நேரு அவர்களுக்கு,
20 நாள்களுக்கு முன் நாங்கள் உங்களுடன் இருந்தபோது எந்த குற்றச்சாடடும் இல்லை. இன்று திடீரென காங்கிரஸை குறிவைக்கிறீர்கள் ..
இது மிகவும் சலிப்பான, மலிவான அரசியல்.
கர்நாடக தலைவர்கள் தங்கள் மக்களுக்காக போராடுகிறார்கள்...
தமிழ்நாடு காங்கிரஸும் "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காகவே துணை நிற்கும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காவிரி நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி மத்திய அமைச்சர் பதவியை துறந்த வரலாற்றை மறக்க வேண்டாம்.
இத்தகைய சலிப்பான, மலிவான அரசியல் வேண்டாம் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தூண்டுதல் நிறைந்த கருத்துகள்...
ஏற்கனவே, காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார் என மாணிக்கம் தாகூர் கூறியிருந்தது குறிப்பிடத்தது.
கடந்த ஏப்ரல் 23 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, தற்போது தவெக தலைமையிலான அரசில் இணைந்துள்ளது.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளன.
Summary
We Don't Want This Cheap Politics: Manickam Tagore Responds to K.N. Nehru...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








