/

பொதுவேலை நிறுத்தம்: கோவை – கேரள பேருந்து சேவை முடக்கம்!

வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை முழுமையாக இயக்கப்படவில்லை...

News image
பொதுவேலை நிறுத்தxே, மறியல் போராட்டத்தால் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை முழுமையாக இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம்.
Updated On :12 பிப்ரவரி 2026, 7:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசைக் கண்டித்து கோவை உக்கடத்தில் மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை(பிப்.12) முழுமையாக இயக்கப்படவில்லை.

நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பொது வேலைநிறுத்தம் காரணமாக, தமிழ்நாடு-கேரளம் எல்லைப்பகுதிகளில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கேரளம் மாநிலம், பாலக்காடு, திருச்சூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய போக்குவரத்து இன்று முழுமையாக இயக்கப்படவில்லை.

உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகாலை முதலே கேரளம் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். முன்பதிவு செய்திருந்த பயணிகள், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அவசர தேவைக்காக பயணம் செய்ய வந்த பொதுமக்கள் மாற்று போக்குவரத்தைத் தேடி அலைந்தனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் கேரள எல்லை வரையிலேயே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி சேவை வழங்கப்படவில்லை. இதனால் எல்லைப்பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன் சேவை நிலவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.