/

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

கோவை - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் வாளையாறு அருகே ரயில் மோதி 3.5 வயது மதிக்கத்தக்க குட்டி யானை பலியானது தொடர்பாக...

News image
வாளையாறு அருகே ரயில் மோதி பலியான 3.5 வயது மதிக்கத்தக்க குட்டி யானை
Updated On :4 பிப்ரவரி 2026, 5:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவை - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் வாளையாறு அருகே ரயில் மோதி 3.5 வயது மதிக்கத்தக்க குட்டி யானை பலியானது.

கேரளம் மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு வட்டப்பாறை வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அதிலிருந்த 3.5 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை மீது அந்த வழியாக வந்த யஸ்வந்த்பூர் ரயலின் எஞ்சின் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது.

யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுப்பதற்காக இந்தப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பக் கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் விபத்து இதுவாகும்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் ரயில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்திலேயே இயக்கப்பட்டது. தண்டவாளம் வளைவான பகுதியில் இருந்ததால் யானை கடப்பதை ஓட்டுநரால் முன்கூட்டியே கவனிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேரள வனத்துறையினர் யானையின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறாய்வு பரிசோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், ரயில்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

summary

Baby elephant killed in a train collision near Walayar. The accident occurred despite AI surveillance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.