/

மேட்டூர் அணை ஜூன் 12-ல் பாசனத்துக்குத் திறக்க வாய்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 276 நாள்களாக 100 அடிக்குக் குறையாமல் இருப்பதால் ஜூன் 12-ல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு இருக்கிறதென விவசாயிகள் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:38 pm

கு. இராசசேகரன்

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 276 நாள்களாக 100 அடிக்குக் குறையாமல் இருப்பதால் ஜூன் 12-ல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு இருக்கிறதென விவசாயிகள் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேட்டூர் அணைப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு  ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28-ந்தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த ஆண்டு ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் அணையிலிருந்து குறித்த நாளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாதங்கள் தாமதமாக ஆகஸ்ட் 13-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 13ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் 7-ந்தேதி அணை நிரம்பியது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த நீர்ப் பாசன  ஆண்டு மேட்டூர் அணை அடுத்தடுத்து நான்கு முறை நிரம்பியது. நடப்பு ஆண்டு ஜனவரி 28-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கடந்த நீர்ப்பாசன ஆண்டு முழுவதும் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 151 டி.எம்.சி. தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 276-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது.

கடந்த 2005 - 2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாள்கள் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 276 நாள்கள் 100 அடிக்குக் குறையாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் குறித்த நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று  விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில்தான் குறித்த நாளில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 885 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.97 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.