கர்நாடக மாநிலம், கல்புர்கி பகுதியின் கஜூரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமா பாய் தாகே சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை. வாரிசுகள் எவரும் இல்லாத காரணத்தால் அவரது சடலம் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவருக்குச் சொந்தமான 50 கிராம் தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த திருடர்கள், நேற்று முன் தினம் பிரேம் பாயின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி 6 அடி ஆழத்தில் இருந்த சடலத்தை கண்டடைந்து அதிலிருந்த 50 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்தவர்கள் கொஞ்சமும் மனிதாபிமானமே அற்றுப் போய் நகையைத் திருடியதுமல்லாமல், திருடிய பின் பிணத்தை மீண்டும் குழியில் இட்டு புதைத்து விட்டுச் செல்லாமல் அப்படியே குழிக்கு வெளியே கிடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மறுநாள் காலையில் இந்த அவலகரமான திடுக்கிடும் காட்சியைக் காண நேர்ந்த மக்கள் திகிலில் உறைந்து காவல்துறைக்கு புகார் அளிக்கவே தற்போது இந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.