1.கல்வியின் தரத்தினையும், மாணாக்கர்களின் அறிவுத் திறனையும் உயர்த்தும் பொருட்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 2011-12-ஆம் கல்வியாண்டில் 7,17,442-ஆக இருந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் கல்வியாண்டில் 9,85,974-ஆக உயர்ந்துள்ளது. இவ்வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்” என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.