ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்திலுள்ள ஜஹஸ்பூர் கிராமத்தில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை மதிக்காமல் மக்கள் இப்போதும் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் கோபமான ஸ்வச் பாரத் செயல் திட்ட அதிகாரி ஒருவர் அதிரடியாக, இனி, இந்தக் கிராமத்தில் யாரேனும் திறந்த வெளியில் மலம் கழித்தால் உடனடியாக அவர்களது வீடுகளில் மின்சார இணைப்பு ரத்து செய்யப்படும், என்பதோடு சம்ம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்து விட்டார். குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் இதுவரை அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை பயன்படுத்தி, தங்களது வீடுகளில் கழிப்பிட வசதி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 19 % மட்டுமே. அங்கு வசிக்கும் கிராமத்தார் சிலர், இப்போதும் அரசின் இந்த நலத்திட்டத்தின் அவசியத்தை உணரக்கூடியவர்களாக இல்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.