அவர்களிடமும் பணம் பெயராது போனால், திருட்டு, வழிப்பறி, தகராறு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறை செல்வார் துரைராஜ். வாழ்க்கை இப்படியே தொடர்வது துரைராஜின் மனைவி மஞ்சுளாவுக்கு பெரும் வேதனையாக இருந்தது. மஞ்சுளா, தன் மகள் பவித்ராவின் எதிர்கால நலனுக்காகவும், மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டியும் ஒரு சிறு தொகையை சேமித்து வந்துள்ளார். ஆனால் துரைராஜுக்கோ மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. சில மாதங்களுக்கு முன் துரைராஜ், தன் மனைவி சேமித்து வைத்துள்ள அந்த சொற்பத் தொகையையும் குடிப்பதற்காகத் தருமாறு கேட்டு சண்டையிட்டிருக்கிறார். மஞ்சுளா மறுக்கவே, சண்டை முற்றி, துரைராஜ், மஞ்சுளாவை பிளேடால் கீறி இருக்கிறார். கணவனின் அடாத செயலால் மனமுடைந்த மஞ்சுளா, உடனடியாக அப்போது அருகிலிருந்த காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, துரைராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.