டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அதிமுகவுக்கு சவாலாகும் அரவக்குறிச்சி கூடார பார்முலா!

ஈரோடு கிழக்கில்  திமுக செயல்படுத்தி வரும் "அரவக்குறிச்சி கூடார பார்முலா' அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:32 am

ஜெபலின்ஜான்


சென்னை: ஈரோடு கிழக்கில்  திமுக செயல்படுத்தி வரும் "அரவக்குறிச்சி கூடார பார்முலா' அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது.

இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றிப்பெறுவதற்கு முக்கிய காரணம் வாக்காளர்களை கவர புதிய உத்திகளை ஆளும் கட்சி கையாளுவது தான் முக்கிய காரணம்.

2005-இல்  நடந்த காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் லட்டுக்குள் மூக்குத்தியை வைத்து ஆளும் அதிமுக வினியோகம் செய்வதாக திமுக குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, அதிமுகவின் கோட்டையான திருமங்கலம் தொகுதியில் 2008-இல் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் 100 வாக்காளர்களை நிர்வகிக்க ஒரு கட்சி நிர்வாகி என வியூகம் அமைத்து வாக்காளர்களை குஷிப்படுத்தியது திருமங்கலம் பார்முலா எனப்  பிரபலமானது.

அரவக்குறிச்சி கூடார பார்முலா:  இந்நிலையில்,  ஈரோடு கிழக்கில் திமுக கையாளும் "அரவக்குறிச்சி கூடார பார்முலா' அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.  ஒன்று அல்லது இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மிகப்பெரிய கூடாரம் அமைத்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினரை காலையும், மாலையும் முழு உபசரிப்புடன் தங்கவைத்து எதிர்கட்சியினர் பிரசாரம் செய்ய வரும்போது வீடுகளில் வாக்காளர்கள் இல்லாத சூழலை உருவாக்குவது தான் இந்த பார்முலாவின் முக்கிய அம்சமாகும்.

முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,  கே.சி.கருப்பண்ணன், டாக்டர் விஜயபாஸ்கர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இதுபோல வாக்காளர்களை கூடாரங்களுக்கு கொண்டுச்செல்வதை திமுகவினர் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றனர். இந்த சவால்களை மீறி தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். வாக்காளர்கள் இல்லாததால் சில நேரங்களில் பிரசார நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

அதிமுக புகார்: இது குறித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் கூறும்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் சுமார் 120 இடங்களில் கட்சி காரியாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய கூடாரத்தை திமுக அமைத்துள்ளது.

வாக்காளர்களில் பெரும் பகுதியினரை நாள்தோறும் காலையில் 7 முதல் 11 மணி வரையிலும்,  மாலையில் 4 முதல் இரவு 9 மணி வரையிலும் அங்கு திமுகவினர் அடைத்துவைத்துக் கொள்கின்றனர்.

தினமும் ரூ.500 முதல் முதல் ரூ.1,000 வரை பணம்,  உணவு,  உற்சாக பானங்கள் கொடுத்து ஏழை வாக்காளர்களை ஏமாற்றி கூடாரத்தில் தங்கவைக்கின்றனர். அங்கு பெரிய திரைச்சீலைகளை வைத்து பொழுபோக்குக்காக சினிமா படங்களை திரையிடுகின்றனர்.

வீட்டில் இருந்து வெளியே வர விரும்பாதவர்களுக்கு தனியாக பரிசு கொடுத்து வெளியே வர விடாமல் மிரட்டுகின்றனர்.  
  
இன்பச் சுற்றுலா செல்லும் வாக்காளர்கள்:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,  கூட்டணி கட்சித்  தலைவர்கள் பிரசாரம் செய்யச் சென்றால் தெருக்களில் யாரும் இருப்பதில்லை. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பிரசாரத்துக்கு  வந்தபோது அவர் பிரசாரம் செய்ய வரும் வழியில் உள்ள வாக்காளர்களில் பெரும் பகுதியினரை சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, கோவை மாவட்டம் ஆழியாறு அணை ஆகியவற்றுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதேபோல, தினமும் சென்னிமலை, பவானி கூடுதுறை என ஆன்மிகச் சுற்றுலாவுக்கும் வாக்காளர்களை அழைத்துச் செல்கின்றனர். திருமங்கலம் பார்முலாவையும் மீஞ்சும் வகையில் ஈரோடு கிழக்கில் புதிய பார்முலாவை திமுகவினர் அமல்படுத்தி வருகின்றனர். இது குறித்து புகார் செய்தால் தேர்தல் அதிகாரிகள் கண்துடைப்பாக தான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார் அவர்.

மின்துறை அமைச்சர் விளக்கம்: இது குறித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது,  வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிமனைகள் மட்டுமே பெரிய  அளவில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்களாக விருப்பப்பட்டு தேர்தல் பணியாற்ற வருகின்றனர்.

தேர்தல் பணிமனைகளில் வாக்காளர்கள் அடைக்கப்படுவதாக கூறுவது தவறான தகவல். சில தேர்தல் பணிமனைகளுக்கு எதிர்கட்சியினர் காவல்துறையுடன் வந்து அங்கிருந்த வாக்காளர்களை அழைத்துப் பார்த்தனர்.

காவல்துறையினர் முன்னிலையில் எதிர்கட்சியினர் அழைத்தும் யாரும் செல்லவில்லை. வாக்காளர்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் தான் புகார் கூறுகிறார்களே தவிர எந்த வாக்காளரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் 22 வாக்குச்சாவடிகளில் சுமார் 20,000 வாக்காளர்களை வீடுகளில் நேரடியாக ஒருமுறை சந்தித்துவிட்டேன்.

எங்குச் சென்றாலும் ஆரத்தி தட்டுகளுடன் வாக்காளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்தால் பெரும்பாலான வீடுகளில் இருப்பவர்கள் பூட்டிக்கொண்டு உள்ளே தான் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சியினர் மீது  நம்பிக்கை குறைவாக இருப்பதால் யாரும் வெளியே வருவதில்லை. தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிந்துகொண்ட  அதிமுகவினர் இப்போதே அதற்கான காரணங்களை அடுக்கத் தொடங்கிவிட்டனர் என்றார் அவர்.

14 கூடாரங்களுக்கு சீல்:  கூடார பார்முலா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மத்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியதுடன் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 10 திமுக,  4 அதிமுக என மொத்தம் 14 கூடாரங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது வெளிதொகுதிகளில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆள்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அதிமுக. அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலின்போது அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வரக்கூடிய சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த கூடார பார்முலா, இம்முறை ஈரோடு கிழக்கில் முழுமையாக  அமல்படுத்தப்பட்டிருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக  மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.