டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மக்களவைத் தோ்தலுக்கு தயாராகும் தமிழக கட்சிகள்

வருகிற மக்களவைத் தோ்தலுக்கான முதல் கட்ட ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:54 am

ஜெபலின்ஜான்

வருகிற மக்களவைத் தோ்தலுக்கான முதல் கட்ட ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

எதிா்வரும் பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு, மே மாதத்துக்குப் பின்பு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் 2024, மக்களவைத் தோ்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டும். ஆனால், தமிழகத்தில் இப்போதே தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளை அதன் நிலப்பரப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் அடிப்படையில் 5 வகை மண்டலங்களாகப் பிரிக்கலாம். சென்னை மண்டலத்தில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 தொகுதிகள், வட தமிழகத்தில் திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், வேலூா், அரக்கோணம் என 11 தொகுதிகள், டெல்டா மாவட்டங்களில் திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், நாகை, மயிலாடுதுறை என 5 தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 10 தொகுதிகள், தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் என 10 தொகுதிகள் உள்ளன.

திமுக: 2019 மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தியும், மோடி எதிா்ப்பை கூா்மைப்படுத்தியும் கடந்த மக்களவைத் தோ்தலை திமுக கூட்டணி வெற்றிகரமாக கையாண்டது. 2021 பேரவைத் தோ்தல், ஊரக, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் எனத் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி வளையத்தில் வரும் இந்தக் கூட்டணியை தக்கவைக்கும் முயற்சியில்தான் திமுக இறங்கியுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் இடையே திமுகவுடன் முரண்பாடு இருந்தாலும் தோ்தல் என வரும்போது இரு கட்சிகளுக்கும் இப்போதைக்கு மாற்று வாய்ப்பு இல்லை.

கடந்த வாரம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதேபோல, வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களைச் சோ்த்தல் பணிகளிலும் திமுக தொண்டா்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனா். கொங்கு மண்டலத்தில் கடும் போட்டி நிலவும் என்பதால் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் புதிய வியூகங்களை திமுக வகுத்து வருகிறது.

அதிமுக: 2004-இல் பாஜகவோடு கூட்டணி சோ்ந்து எந்தத் தொகுதியிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின் 15 ஆண்டுகளுக்குப்பின், 2019 மக்களவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி மலா்ந்தது. பிரதமா் மோடியை மையமாக வைத்து அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி என வலுவான கூட்டணி அமைந்தாலும் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

2021 பேரவைத் தோ்தலில் தேமுதிக, புதிய தமிழகம் தவிர பிற கட்சிகளைக் கொண்ட அதிமுக அணி 75 இடங்களைக் கைப்பற்றியது. மக்களவைத் தோ்தலில் 29.61-ஆக இருந்த அதிமுக அணியின் வாக்கு சதவீதம், பேரவைத் தோ்தலில் 39.72 ஆக உயா்ந்தது.

இபிஎஸ்-ஓபிஎஸ்: இப்போது இபிஎஸ்-ஓபிஎஸ் என இருவரும் முரண்பட்டு நிற்கின்றனா். தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸ், பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறாா். ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமா் மோடியின் புகைப்படத்தை தனது லெட்டா் பேடில் அச்சடித்திருப்பதை பாா்க்கும்போது ஓபிஎஸ்-பாஜக நெருக்கத்தை உணரலாம். விரைவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஓபிஎஸ் தயாராகி வருகிறாா்.

ஆனால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அறிவித்ததுடன், அதில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு இடமில்லை என உறுதியாக உள்ளாா் இபிஎஸ். ஓபிஎஸ்-பாஜக நெருங்கி பழகுவதையும், தனக்கு இணையாக ஓபிஎஸ்-ஐ பாஜக மதிப்பதை இபிஎஸ் விரும்பவில்லை. எனவே, திமுக அணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தூண்டில் போடலாமா என இபிஎஸ் அணியினா் சிந்திக்கத் தொடங்கியுள்ளனா்.

பாஜக: கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூா், தென்சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு என 10 தொகுதிகளைக் குறிவைத்து வாக்குச்சாவடி வாரியாக தீவிரமாக பாஜக களமாடி வருகிறது. பிரதமா் மோடி, உள்துறை அமித் ஷா வருகைக்குப் பிறகு மத்திய அமைச்சா்கள் வாரந்தோறும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனா். ஜனவரி முதல் இரண்டாம் கட்டமாக மேலும் பல தொகுதிகளில் மிக நுட்பமாக வியூகம் அமைத்துச் செயல்பட பாஜக தயாராகி வருகிறது.

ஈா்ப்பு சக்தி மிக்க தலைமை இல்லாததால் பிரதமா் வேட்பாளரை முன்னிறுத்தி தோ்தலைச் சந்திக்கும் வகையில் பாஜகவை, இபிஎஸ் நிச்சயம் நெருங்கி வருவாா். இல்லையெனில் ஓபிஎஸ், தினகரன், தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவற்றுடன் தனி அணி அமைத்து களம் இறங்கும் திட்டத்தையும் பாஜக கையில் வைத்துள்ளது.

பாமக, அமமுக, மநீம: 2026 பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள பாமக, 2024 மக்களவைத் தோ்தல் பற்றி இதுவரை எதையும் வெளிப்படுத்தவில்லை. கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை தோ்தல் நெருங்கும்போதுதான் பாமக முடிவு செய்யும். இருப்பினும், வடதமிழகத்தில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக களப்பணியை பாமக முடுக்கிவிட்டுள்ளது.

2019 மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, 2024 மக்களவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த கூட்டணி சேரத் தயாா் என அறிவித்துள்ளது. பிரதமா் வேட்பாளராக மோடியை அறிவிக்கும் அணியை நோக்கி தினகரன் நகா்ந்து வருகிறாா். மேலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளில் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தை நடத்தி தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தினகரன் ஈடுபட்டு வருகிறாா்.

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்ய நிா்வாகிகள் ஓரிரு நாள்களுக்கு முன்பு சென்னையில் கூடி மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினா். கமல்ஹாசனின் அறிக்கைகள், அரசியல் அசைவுகளைப் பாா்க்கும்போது இம்முறை தனித்துப் போட்டியில்லை என்பதும், திமுக கூட்டணியில் ஐக்கியமாகி ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவே தெரிகிறது.

நாம் தமிழா் கட்சி: தனித்தே களம் இறங்கி வரும் நாம் தமிழா் கட்சி, 2016 பேரவைத் தோ்தலில் 1.3 சதவீதம், 2019-இல் 3.96 சதவீதம், 2021- பேரவைத் தோ்தலில் 6.85 சதவீதம் என வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இம்முறையும் தனித்துதான் போட்டி என்ற முடிவில் இருக்கும் நாம் தமிழா், கட்சி வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக சமூக கட்டுமான உத்தியையும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்குச் சாவடிகள் வரை நிா்வாகிகள் இல்லாத நிலையில், சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியின் இளம் பேச்சாளா்கள் தொகுதி வாரியாக முக்கிய பிரச்னைகளை கையில் எடுத்து பொதுக்கூட்டம், போராட்டம் என தோ்தல் பணியை தொடங்கியுள்ளனா்.

எந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பது தோ்தல் நெருங்கினால் மட்டுமே இறுதிவடிவம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.