துவர்ப்பும், கசப்பும் உடைய இதன் இலைத்தளிர் சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்தப் படுகிறது. இது சிவனுக்கே குளிர்ச்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றது. அப்போது நமக்கு இல்லாமலா என்ன? ஆம். பித்தம் சார்ந்த நோய்களை நீக்குவதில், சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் வில்வ இலை மிகச் சிறந்தது என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனை “வில்வத்தின் வேருக்கு வீறு குன்மம் வாயுகபம், சொல்லவொணா பித்தம் தொடர்சோபை நீங்கும்” என்ற அகத்தியர் குணவாகப் பாடல் வரிகளால் அறியலாம்.
வில்வ இலையில் உள்ள பிளவனாய்டு வேதிப்பொருளால் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், கிருமிக் கொல்லியாகவும், முக்கியமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்-க்கு எதிராக செயல்படும் தன்மையும், வயிற்றுப் போக்கினை நீக்கும் தன்மையும், இரைப்பையை பாதுகாக்கும் தன்மையும், பெருங்குடல் அழற்சி(புண்) போக்கும் தன்மையும், கல்லீரலை மற்றும் இருதயம் பாதுகாக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், வீக்க முருக்கியாகவும், மூட்டுவாதத்தை குறைப்பதாகவும், தோல் ஒவ்வாமையை தீர்ப்பதாகவும் உள்ளது.