மலையை வெட்டி அமைக்கப்படும் சாலைகளால் நீலகிரியில் நிலச்சரிவு அபாயம்!
நீலகிரியில், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்களில் மலையை வெட்டி சாலைகள் அமைக்கப்படுவதால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்திருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


நீலகிரியில், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்களில் மலையை வெட்டி சாலைகள் அமைக்கப்படுவதால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்திருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், பல நூறு ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டங்களும், விவசாய நிலங்களும் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்குவோர், பயிர்களை அழித்து, அங்கு பங்களா, தங்கும் விடுதி ஆகியவற்றைக் கட்டுகின்றனர். விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிகளுக்காக மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கும் பணியிலும் பலர் ஈடுபடுகின்றனர்.
பெரும்பாலும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்களில்தான் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. ஊராட்சித் தலைவர்கள் தங்கள் அதிகாரத்துக்கு உள்பட்டு, 1,500 சதுர அடி பரப்பளவில் கட்டடங்களைக் கட்ட அனுமதி வழங்குகின்றனர்.
அதற்கும் கூடுதலான பரப்பளவில் கட்டடங்கள் கட்ட வனத் துறை, வேளாண் பொறியியல் துறை, கனிமவளத் துறை ஆகியவற்றில் தடையில்லாச் சான்று பெற்று, பின்னரே ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், மாவட்டத்தின் பல இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் இடையே குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில், தோட்டங்களில் மலைச்சரிவை வெட்டி அணுகு சாலைகள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய சாலைகளை அமைக்க, எந்த அனுமதியும் பெறப்படுவதில்லை.
இதற்காக, சாலைகளின் இடையே தென்படும் கற்களை உடைப்பது, தடுப்புச் சுவர் அமைப்பது, மண்ணை அகற்றுவது போன்ற பணிகளை சிலர் மேற்கொள்கின்றனர். இதனால் மண் சரிவு, நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர்கள் கூறுகையில், "விவசாய நிலங்களில் குடியிருப்புகளைக் கட்ட அனுமதி பெறும் கட்டட உரிமையாளர்கள், சாலை அமைக்க அனுமதி பெறுவதில்லை. அப்பணியை வருவாய்த் துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில்,"விவசாய நிலங்களில் விவசாயப் பயன்பாட்டுக்கு எனக் கூறி, பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்த சிலர் அனுமதி பெறுகின்றனர். பிறகு விதிகளை மீறி, சாலை அமைத்துக் கொள்கின்றனர்' என்றனர்.
உண்மையில், அனுமதியில்லாமல் சாலை அமைத்துக்கொள்வதற்காக, ஊராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கட்டட உரிமையாளர்கள் கணிசமான தொகையைக் கொடுப்பதாகவும், அதனால்தான் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் கூறுகையில், "விவசாய நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொள்வோர், நிலங்களின் இடையே சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் உள்பட எந்தவொரு துறையின் அனுமதியையும் பெறுவதில்லை.
அதற்கான விதிமுறை தெளிவாக இல்லை. விவசாய நிலங்களில் சாலை அமைக்க சில விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் சிறிய அளவில் மழை பெய்தால்கூட நிலச்சரிவு ஏற்படும் நிலையில், இதுபோன்று மலையை வெட்டி அமைக்கப்படும் சாலைகளால் விபரீதம் விளையும். அதற்குள் கட்டுமானப் பணிகளுக்குப் புதிய விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு வகுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...