நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி(சனிக்கிழமை) நிலநடுக்கம் காரணமாக தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டன. ரிக்டர் 7.9 அளவு பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் மற்றும் கோயில் வளாகங்கள் ஆகியவை மண்ணில் புதைந்தன. இதில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சேனையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(35), உறவினரான கனகராஜ் ஆகியோர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பகுதி அச்சகத்தில் பணியாற்றுவதற்காக சென்றார்களாம். அதைத் தொடர்ந்து உறவினரான சுரேஷ் என்பவர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு சென்றாராம். இதேபோல், சாத்தூர் அருகே தாயில்பட்டியைச் சேர்ந்த ரவிசந்திரன் என்பவரும் காத்மாண்டுவில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள அச்சகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறராம். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.