/

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது  பொய் வழக்கு போடுகிறார்கள்: ராமகோபாலன்

கோவையில் ஜூன் 7ஆம்தேதி நடைபெறும் மாநில மாநாட்டை சீர்குலைக்க போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது  பொய் வழக்கு போடுகிறார்கள் என்று ராமகோபாலன் குற்றச்சாட்டினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:12 am

கவிதன்

கோவையில் ஜூன் 7ஆம்தேதி நடைபெறும் மாநில மாநாட்டை சீர்குலைக்க போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது  பொய் வழக்கு போடுகிறார்கள் என்று ராமகோபாலன் குற்றச்சாட்டினார்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையில் மாநில இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 28ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்முகாமானது வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகிறது. இந்த பயிற்சி முகாமை பார்வையிட இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் வீரத்துறவி ராமகோபாலலன் செவ்வாயக்கிழமை  வருகை தந்தார். பின்னர் முகாமை பார்வையிட்டார். அங்குள்ள இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கலந்தாய்வு நடத்தினர்.  புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் போலீஸார் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இதை இந்து முன்னணி வண்மையாக கண்டிக்கிறது. கடந்த 2ஆண்டுகளாக இந்து முன்னணி நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை குற்றவாளிகள் மீது  நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்ததாக தெரியவில்லை. இதை கொலைகளை திசை திருப்ப முன்னாள் டிஐஜி ராமானுஜம் சொத்து பிரச்னையாக மாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 12ஆம்தேதி கோவையில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் பேசியதற்காக அங்குள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் மீது  பொய்வழக்கு போடப்பட்டது. அதேபோல் அங்குள்ள காந்திபூங்காவில் அநீதிக்கு எதிராக செயல்பட்டதாக  இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கிஷோர்குமார், சதீஷ், ஜெயசங்கர், குணா ஆகியோர் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வழக்கு போடப்பட்டுள்ளது போலீசின் அறியாமையை காட்டுகிறது. கோவையில் ஜூன் 7ஆம்தேதி இந்து முன்னணியின் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதை  சீர்க்குலைப்தற்காக போலீஸார் வேண்டுமேன்றே பொய் வழக்கு போட்டு வருகின்றனர். போலீசாரின் செயல்பாட்டை வண்மையாக கண்டிக்கிறோம். திட்டமிட்டப்படி கோவை மாநாடு நடைபெறும்.  இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள  பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர கூடிய திட்டமான கன்னடியான் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு கூடுதல் நிதி பெற்று விவசாயிகளின் நலன் கருதி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மாசுக்கள் நிறைந்த இடமாக தூத்துக்குடி நகரம் என மாசுகட்டுபாடு அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அதிக பவர் பிளாண்ட்தான். தூத்துக்குடியில் டெரிலைட் ஆலை மத்திய அரசின் அனுமதியோடு செயல்படுகிறது. இந்த ஆலைக்கு எதிராக மக்கள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் அதில் நவீன் இயந்திரத்தை பயன்படுத்தி இத்திட்டம் செயல்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகநேரி தாரங்கா தொழிற்சாலையை சில தேச விரோத கூட்டமைப்பினர் அதை மூட  போராட்டம் நடத்தி வருகிறது. ஆதலால் மத்திய அரசு  ஆய்வு நடத்தி சதி திட்டம் தீட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருஞ்சுனை அய்யனார் கோயில். பாபநாசம் கோயிலில் வனத்துறையினர் வழிப்பாடு நடத்த வரும் மக்களை மிரட்டி தடுக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. இது வண்மையாக கண்டிக்கதக்கது.  அரசு இதில் தலையிட்டு மக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்திட  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எத்தனை கோயில்கள் எனவும், அதில் உள்ள சொத்துக்கள் குறித்து இந்துஅறநிலையத்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மகாராஷ்டாவில் பசு வதை  தடை சட்டத்தை அங்குள்ள அரசு அமல் படுத்தியுள்ளது. இதை இந்து முன்னணி வரவேற்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தரிசன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் . இல்லையேல் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அப்போது அவருடன் மாநில தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயகூத்தன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வி.எஸ். முருகேசன், மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். சுந்தரவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.