/

தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: ஊரக தொழில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன்

விருதுநகரில் சரஸ்வதி அரங்கத்தில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையும் இணைந்து நடத்திய பட்டு விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:47 am

எஸ். பாண்டியன்

தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

விருதுநகரில் சரஸ்வதி அரங்கத்தில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறையும் இணைந்து நடத்திய பட்டு விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், சேலம் பட்டு வளர்ச்சி துறையின் இயக்குநர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் ஊரக தொழில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பங்கேற்று பேசுகையில், தமிழகம் கச்சாப்பட்டு உற்பத்தியில் நான்காவது மாநிலமாக   உள்ளது. தமிழகத்தில் 20863 விவசாயிகளால் 33861 ஏக்கர் நிலப்பரப்பில் மல்பரி சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து 1000 மெட்ரிக் டன் பட்டுக் கூடு கிடைக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரையில் கிடைக்கிறது. எனவே தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர் பகுதியில் பட்டு உற்பத்தி விவசாயிகள் உள்ளனர். இத்தொழிலை சாத்தூர், சிவகாசி பகுதிகளில் விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயியை ஒரு பட்டு விவசாயத்தில்  ஈடுபடச் செய்ய வேண்டும். இதற்காக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் 310 பேர் என முதல்வர் இலக்கு நிர்ணயித்து இருந்தார். ஆனால், 327 விவசாயிகள் புதிதாக பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராமங்களில் பட்டு வளர்ப்புத் தொழிலை மகளிர்களும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். விபத்தில்லாத தொழிலாகவும் இருக்கிறது.

பட்டு வளர்ப்பு தொழிலை ஊக்கப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ரூ.3.48 கோடி வரையில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் இத்துறைக்காக ரூ.30 கோடி வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் வரவு செலவு திட்ட அறிக்கையில் ரூ.10.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். அதற்கு முன்னதாக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டுத் தொழில் நுட்ப வளர்ச்சி கண்காட்சியை தொடங்கி வைத்து, 3856 பட்டு விவசாயிகளுக்கு ரூ.3.82 கோடியிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்த விழாவில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, துணைத்தலைவர் எஸ்.மாரியப்பன், துணை ஒன்றியக் குழு தலைவர் மூக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நிறைவாக சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் சிக்கண்ணா நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.