இக்கல்லூரி வளாகத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு உபதலைவர் என்.தனபால் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் அழகுசுந்தரம், மூத்த வழக்குரைஞர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.இ.பத்மா பங்கேற்று பேசுகையில், அனைவருக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்காக தாலுகா தலைமையிடத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவானம்சம் பெறவும், வரதட்சணை கொடுமை, சொத்து பிரச்னை ஆகியவைகளிலிருந்து இம்மையம் மூலம் உரிய நீதி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஏழைகளுக்கு இலவசமாக வாதிடுவதற்கு வழக்குரைஞர்களும் ஏற்பாடு செய்வதோடு, அக்கட்டணத்தை நீதிமன்றமே செலுத்தி விடும் எனவும் அவர் தெரிவித்தார்.