/

வகுப்பறையில் மது குடித்துவிட்டு ரகளை:பிளஸ்2 மாணவர்கள் 6 பேர் நீக்கம்

பள்ளியில் மது அருந்தி விட்டு பிரச்னையில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:36 am

பெ. விஜயபாஸ்கர்

பள்ளியில் மது அருந்தி விட்டு பிரச்னையில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம், முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த விழா நடைபெற்றது. அப்போது பிளஸ் 2 மாணவர்கள் 6 பேர் வகுப்பறையில் அமர்ந்து மது குடித்துவிட்டு, ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டனர். இத விழாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் 6 மாணவர்களையும் அழைத்து விசாரித்தபோது அவர்களில் சிலர் மது குடித்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி மாற்று சான்றிதழை கொடுத்து தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார்.

 6 பேரில் ஒரு மாணவர் மட்டும் வேறு ஒரு அரசு பள்ளியில் சேர்ந்து கொண்டார். மற்ற 5 மாணவர்கள் வேறு பள்ளியில் சேர சென்ற போது அங்குள்ள தலைமை ஆசிரியர்கள் மறுத்துவிட்டனர்.

 இந்நிலையில் 3 மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் கொல்லிமலைக்கு பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றுவிட்டதால், மாணவர்களின் பெற்றோர்களால் அவரை சந்தித்து முறையிட முடியவில்லை.

 இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து முறையிடும்படி கூறி அனுப்பிவைத்தனர்.

 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் கூறுகையில் 6 மாணவர்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறும் சமயத்தில் சரியாக படிக்காமல் பள்ளியில் ஒழுங்கீனமான அந்த மாணவர்கள் நடந்து கொண்டதால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே 6 பேர் மீதும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து இது குறித்து பேசி அவர்களுக்கு உரிய அறிவுரை அளிக்கப்படும். ஒரு மாணவர் மட்டும் வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார், மற்ற 5 மாணவர்களும் வெவ்வேறு அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.