/

மக்களவை தேர்தலில் காங்கிரஸ்-பா.ஜ.கவுக்கு ஆதரவு கிடையாது: ஜி.ராமகிருஷ்ணன்

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஒரே பொருளாதார கொள்கையாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கிடையாது என்றும், இவ்விரு கட்சிகள் இல்லாத மற்ற மாநில கட்சிகளுடன்

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:56 pm

எஸ். பாண்டியன்

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஒரே பொருளாதார கொள்கையாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கிடையாது என்றும், இவ்விரு கட்சிகள் இல்லாத மற்ற மாநில கட்சிகளுடன் ஆராய்ந்து கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரதட்சணைக்கு எதிரான மாநாடு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ்-பா.ஜ.க ஆகிய கட்சிகளின் கொள்கை ஒரே பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. அதன் மூலம் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அதனால் வருகிற மக்களவை தேர்தலில்   மாற்று அரசு தேவையாக இருக்கிறது. அதனால், மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற கட்சிகளுடனும், அதோடு இவ்விரு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையிலேயே கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இரண்டு தரப்பு மீனவர்கள் மற்றும் அலுவலர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.  

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு தொழில் மக்களின் வாழ்வாதரமாக இருக்கிறது. இந்த ஆலைகளில் போதுமான விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால் தான் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நேரிடுகிறது. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து அரசு விதிமுறைகள் பின்பற்றச் செய்வதன் மூலம் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துக்களை தடுக்க முடியும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

உடன் மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.