/

வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தொடர்பான தாமிர பட்டயம்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் அருகே உள்ளது பாவாலி கிராமம். இக்கிராமத்தில் 214 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய சென்னைப்பட்டிணம், திருநெல்வேலி சீமை பகுதியில் விஸ்வநாதநாயக்கர் ஆட்சி செய்யும் போது

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:12 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கட்டபொம்மன் வரலாறு தொடர்பான தாமிர பட்டயம் வைக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது பாவாலி கிராமம். இக்கிராமத்தில் 214 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய சென்னைப்பட்டிணம், திருநெல்வேலி சீமை பகுதியில் விஸ்வநாதநாயக்கர் ஆட்சி செய்யும் போது பாளையக்காரர்கள் நியமனம் செய்தனர். பின்னர் பாளையக்காரர்களையே தலைவர்களாக கொண்டு உள்நாட்டு காவல், வரி வசூல், விவசாய கிஸ்தி உள்ளிட்ட வருவாய் வசூல் செய்யும் பொறுப்புகளையும் ஒப்படைததனர். அப்போது, பாஞ்சலாம்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்து வந்தார். அப்போது, ஆங்கிலேயர் திருநெல்வேலி சீமையில் நிர்வாகம் செய்வதற்கு உதவியாக இல்லாமல், இடையூராக இருந்து வந்தனராம். எனவே இடையூறு ஏற்படுத்தும் பாளையக்காரர்களை போர் மூலம் ஒழித்து கட்டுவதற்கு முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 1799-செப். மற்றும் அக்டோபர் மாதம் இரண்டு வாரங்களாக பாளையக்காரர்களுக்கும்- ஆங்கிலேயர்களுக்கும் கடும் போர் ஏற்படுகிறது. இதில், தோல்வி ஏற்படும் தருணத்தி்ல் கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அப்போது, சில பாளையக்காரர்களும் வெளியேறிச் செல்கின்றனர். அப்போது புதுக்கோட்டையில் பாதுகாப்பாக தங்குகின்றனர். பின்னர் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து கட்டபொம்மனை பிடித்தனர். அதையடுத்து, 1799-அக்.16ம் தேதி கயத்தாறில் தூக்கிலிடப்படுகிறார்.

அதையடுத்து, இது தொடர்பாக ஆங்கிலேய அரசின் நிர்வாகி மெசர்பானர்மேன் துரை, ஆங்கிலேயே அரசுக்கு எதிராக எதுவும் செய்யக் கூடாது என்பதை பாளையக்காரர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தாமிர பட்டயத்தில் முக்கிய தலைக்கிராமங்களில் வைக்க உத்தரவிடப்படுகிறது. அதில், விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் கல்பலகையில் தாமிரபட்டயத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.அதில் 21.10.1799ல் ஆங்கிலேயே அரசின் நிர்வாகி மெசர்பானர்மேன் துரை திருநெல்வேலி சீமை பாளையம்பட்டுக்களில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தெரியும்படியாக விளம்பரம் பண்ணி வைக்கப்படுகிறது. ஆங்கிலேயே அரசின் உத்தரவின் பேரில், தற்காலத்தில் திருநெல்வேலியில் நிர்வாகம் செய்திட பாளையக்காரர்களான பாஞ்சாலாங்குறிச்சியான், எழாயிரம்பண்ணையான், நாகலாபுரத்தான், கொல்லம்பட்டியான், காடல்குடியான், குளத்தூரான் இடையூறு உண்டாக்கினர். அதனால், பாளையபட்டுக்களை தட்டிக்கொள்ள அவசியம் உண்டானது. பாஞ்சாலாங்குறிச்சி கட்டபொம்மன் நாயக்கர், அவரது தளபதி சுப்பிரமணியபிள்ளை, நாகலாபுரம் பாளையக்காரரின் மகன் சவுந்திரபாண்டிய நாயக்கர் உயிரோடு ஆக்கினை செய்யப்பட்டனர். இன்னும் சில முக்கியபட்டவர்களின் பாளையம்பட்டுக்களை நீக்கி வச்சி சென்னைப்பட்டிணம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாளையங்களில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்தும், அதில் உள்ள சேவைக்காரர்கள், சேவர்கள், குடியானவர்கள் பொருள்களையும், கையி்ல் உள்ள ஆயுதங்களையும், பறிமுதல் செய்து கொள்ள நேர்ந்தது. இந்த விளம்பரம் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் இனிமேல் யாதொரு பாளையக்காரனுக்கும், வரி, வட்டி, கோட்டை, கொத்தலம் முடையங்கள் போட்டாலும், பீரங்கி, ரேக்குகள், கொடிமரங்கள் வைத்து இருந்தாலும், கத்தி, ஈட்டி முனை வைத்திருந்தாலும் அவர்கள் ஆங்கிலேயர்களின் ஆதரவுகளை இழந்தும், அவர்களின் பாளையப்பட்டுகளை பறித்துக் கொண்டும், ஆங்கிலேயருக்கு எதிரி என்று தண்டிக்கப்படுவர்.பாளையப்பட்டுக்களிலுள்ள சேவைக்காரர், சேவுகர்கள், காவல் காரர்கள், குடியானவர்கள் யாவரானாலும் கல்வெடி, திரிவெடி, ஈட்டி, வல்லையம், பிடிகத்தி, பிக்காஸ்கனைகள் போன்றவற்றைகளை பதுக்கினாலும், வைத்திருந்தாலும் அந்த பாளையக்காரர்கள் தண்டிக்கப்படுவர். இவர்கள் யார் தவறு செய்தாலும் பாளையக்காரர்களே பொறுப்பு என்று உத்தவாதம் செய்ய வேண்டும். இதை மீறி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கண்டால் பிடிபட்டவர்களின் உயிர்சேதம் செய்யப்படும். அந்த பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களால் தட்டப்படும். இந்த விளம்பரம் செய்ய வேண்டி மெசர்பானர்மேன் துரையின் உத்தரவின் படி அனைவரும் சட்டதிட்டங்களை இனிமேல் பட்டு ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது குறித்து செப்பு பட்டயத்தில் எழுதி பாளையம்பட்டு தலை கிராமங்களில், பிரபலமாக இருக்கப்பட்ட இடங்களில் அடித்து வைத்து உத்தரவு ஆச்சுது, என செப்பு பட்டயத்தில் இருக்கிறது.

இது குறித்து வரலாற்று ஆர்வலர் கலாநிதி என்பவர் கூறுகையில், இந்த செப்பு பட்டயத்தை தொல்லியல் துறையினர் கைப்பற்றி காட்சியகத்திற்கு கொண்டு செல்வதற்காக வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டனர். அதற்கு, கிராம மக்கள் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. அதனால், இதை அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ஆனால், இதுவரையில் தாமிர செப்பு பட்டயம் அழியாமல் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அப்படியே இருக்கிறது. மேலும், குறிப்பாக பாளையப்பகுதிகளில் முக்கிய கிராமங்களில் வைக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற செப்பு பட்டயம் எட்டயாபுரத்தில் மட்டுமே காணப்படுவதாகவும் கூறப்படுவதாக வரலாற்று ஆர்வலர் கலாநிதி தெரிவித்தார்.

பாதுகாப்பு:

இந்த செப்பு பட்டயம் 214 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இருக்கிறது. பாவாலி கிராமத்தில் அப்போதைய வழிபோக்கர்கள் தங்கும் இடத்தில், முக்குச்சாலை அருகே கல்தூனில் செப்பு பட்டயம் பதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்த பட்டயத்தின் அருமை தெரியாத நிலையில் எந்தவிதமான பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே இனிமேலாவது சுற்றுச் சுவர் எழுப்பி பாதுகாப்பாக வைத்தால் வருங்கால சந்ததியினரும் வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இதுபோன்ற வரலாற்று குறிப்புகளை பாதுகாப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.