சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் விஜயகாந்த்: முதல்வர்

சிறு வணிகர் நிறுத்திலும், உள்ளத்திலும் கருப்பானவர். இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு...

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:53 pm

சா. ஜெயப்பிரகாஷ்

ஸ்ரீரங்கம், செப்., 13 : தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு புதிய நலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே துவங்கி நடந்து முடிந்த பணிகளை திறந்து வைத்தும் மக்களிடையே உரையாற்றினா.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில், ரூ.22 கோடி செலவில், ஸ்ரீரங்க தொகுதியில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம்,  ரூ.8.67 கோடி செலவில், ஸ்ரீரங்கம் தொகுதியில்  வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் அமைப்பது, ஒன்றரை கோடி செலவில் ஸ்ரீரங்கம் பஞ்சக்கடையில் உள்விளையாட்டரங்கம் அமைப்பது ஆகியவை அடங்கும். இன்று ஸ்ரீரங்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ள நலப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.82 கோடியே 63 லட்சமாகும்.

ஏற்கனவே ரூ. 27 கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம்  செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு நலத்திட்டங்களையும் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதில், பேட்டவாய்க்கரை பகுதியில் ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகம், ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தெருவில் கட்டி முடிக்கப்பட்ட நூலக வளாகம், ரூ.68 ஆயிரம் செலவில் 4 இடங்களில் கட்டப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள், ஸ்ரீரங்கத்தில் ரூ.96 லட்சம் செலவில் கட்டப்பட்ட  கலைப் பண்பாட்டுத் துறை வளாகம் உள்ளிட்டவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்.

மேலும், 34,000 பயனாளிகளுக்கு  50 கோடியே 62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திறந்து வைக்கப்பட்ட நலத்திட்டப் பணிகளுக்கான மொத்த மதிப்பு ரூ.160 கோடியாகும்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தன்மானம் பெரிது என்று வாழ்பவன் தான் தமிழன்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர்.  பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார்.  இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.  அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, “ சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.

“இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்” என்பது தான் அந்தத் தகவல்.

உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் .

அதில் “என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன்.  இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன்.  இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை” என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது.

சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.

இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசிய முதல்வர், பிறகு ஒரு குட்டிக் கதையைக் கூறினார்.

அதில், பெரு வணிகர் ஒருவரும், சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், பெரு வணிகர் விரோதம் கொண்டு சிறு வணிகர் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கை வாதாட சிறு வணிகர் தனக்குத் தெரிந்த ஒரு வழக்குரைஞரைக் காணச் சென்றார்.

ஆனால் அந்த வழக்குரைஞரோ, இந்த வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை. எனினும், சிறு வணிகர் வழக்குரைஞரை தொடர்ந்து சந்தித்து, வழக்குத் தொடர்வது குறித்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வழக்குரைஞரும் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்து நீதிமன்றத்தில் பெரு வணிகர் போட்ட வழக்கை எடுத்து வாதாடினார்.

வழக்கு விசாரணை முடிந்து சிறு வணிகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. உடனே வழக்குரைஞரை சந்தித்து நன்றியோ, பாராட்டோ தெரிவிக்காத சிறு வணிகர், எல்லோரிடமும், இந்த வழக்கில், தனக்கு சாதகமான விஷயங்கள் இருந்ததால், இயல்பாகவே வழக்கின் முடிவு வெற்றியாக அமைந்துள்ளது. இதில் வழக்குரைஞரின் வாதச் சிறப்பு ஏதும் இல்லை. வழக்கு வெற்றிகரமாக முடியும் என்று தெரிந்துதான் இவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார் என்று அவதூறாக பேசி வந்தார்.

இந்த சிறு வணிகர் நிறுத்திலும், உள்ளத்திலும் கருப்பானவர். இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசுவார்கள் என்று சூட்சுமமாக விஜயகாந்த்தை பற்றி முதல்வர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.