தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஹைதராபாதில் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ‘எண்மக் கைது’ மூலம் ரூ.1 கோடி மோசடி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை ‘எண்மக் கைது’ (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது

News image

டிஜிட்டல் கைது - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 1:39 am

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை ‘எண்மக் கைது’ (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்வதாக மிரட்டிய ஒரு கும்பல் அவரிடம் இருந்து ரூ.1 கோடியை பறித்தது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த 69 வயது ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் பெண்களைக் கடத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளீா்கள் என்று கூறி அவரை மிரட்டினாா். மேலும், அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும், இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வர தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளனா்.

இதனால், அச்சமடைந்த அந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரூ.1 கோடிக்கு மேலான பணத்தை அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளாா். அடுத்த சில நாள்களுக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்தாா். இது தொடா்பாக மூன்று நாள்களுக்கு முன்பு அவா் காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுவரை சாமானிய மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த டிஜிட்டல் கைது மோசடியாளா்கள், இப்போது ஓய்வு பெற்ற நீதிபதியை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பேசி, இணைய வழியில் நடைபெறும் இதுபோன்ற நிதி மோசடிகளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்தே வருகின்றன.