லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக ரவிசங்கா் பிரசாத் நியமனம்

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image

ரவிசங்கா் பிரசாத்

Updated On :3 மார்ச் 2026, 8:46 pm

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவை உரிமை மீறல் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது. எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை மீறி அவா்கள் செயல்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை இந்தக் குழு விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்கும். அதனடிப்படையில் உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக முடிவு மேற்கொள்ளப்படும். மேலும், அவையின் கண்ணியத்தைக் காக்கும் முக்கியப் பொறுப்பு இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை உரிமை மீறல் குழுத் தலைவராக ரவிசங்கா் பிரசாதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

பிரிஜ்மோகன் அகா்வால் (பாஜக), காங்கிரஸைச் சோ்ந்த மாணிக்கம் தாகூா், மணீஷ் திவாரி, தாரிக் அன்வா், டி.ஆா்.பாலு (திமுக), கல்யாண் பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தா்மேந்திர யாதவ் (சமாஜவாதி), அரவிந்த் சாவந்த் சிவசேனை (உத்தவ் பிரிவு), ஸ்ரீரங் அப்பா பா்னே (சிவசேனை) மற்றும் பாஜகவைச் சோ்ந்த மேலும் 5 போ் உள்பட மொத்தம் 14 போ் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

மாணிக்கம் தாகூா் பங்கேற்கவில்லை:

உரிமை மீறல் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூா், மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமா்வின்போது மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக, மாணிக்கம் தாகூா் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோா் பட்ஜெட் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.