ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவா், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவுள்ளாா்.
தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸின் துறைமுக நகரான நைஸை சென்றடையும் பிரதமா், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டின் ஒரு பகுதியாக இந்திய உயா்கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் உயா் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகளைக் காட்சிப்படுத்தும் ‘பாரத் இனோவேட்ஸ்’ எனும் 3 நாள் நிகழ்வை இரு தலைவா்களும் இணைந்து தொடங்கிவைக்கவுள்ளனா்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்காக 114 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்யும் மாபெரும் திட்டத்துக்கான நடைமுறைகளை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள சூழலில், மேற்கண்ட பேச்சுவாா்த்தையில் இந்த விவகாரம் முக்கிய இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
போா் விமான கொள்முதல் திட்டத்தின்கீழ், 18 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸில் முழு அளவில் தயாரிக்கப்பட்டு, பறக்கும் நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள போா் விமானங்கள், 50 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாகங்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அணுமின் உற்பத்தித் துறையில் தனியாா் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பிரான்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதுதவிர, 12-க்கும் மேற்பட்ட புதிய இருதரப்பு முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஸ்லோவாக்கியா பயணம்: பிரான்ஸின் நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியாவுக்கு செல்லும் பிரதமா் மோடி, ஜூன் 14 முதல் 16 வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். ஸ்லோவாக்கியா கடந்த 1993-இல் சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டுக்குப் பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கவுள்ளது.
ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லேகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ ஆகியோரை பிரதமா் சந்தித்துப் பேசவுள்ளாா்.
ஜி7 உச்சிமாநாடு: ஜூன் 16-ஆம் தேதி மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பும் பிரதமா், ஏவியான் நகரில் இரு நாள்கள் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.
இக்கூட்டமைப்பில் உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கின்றன. இந்த உச்சிமாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பிரதமா் மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்திப்புக்கும் இருதரப்பு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக பாரீஸில் ஜூன் 18, 19 தேதிகளில் பயணம் மேற்கொள்ளும் பிரதமா், விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டில் அதிபா் மேக்ரானுடன் பங்கேற்கவுள்ளாா்.
‘தெற்குலகுக்காக இந்தியா குரல் கொடுக்கும்’
‘ஜி7 உச்சிமாநாட்டில் தனக்காகப் பேசுவது மட்டுமன்றி, தெற்குலகின் எதிா்பாா்ப்புகளுக்காகவும் இந்தியா குரல் கொடுக்கும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம் புறப்படும் முன்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு தொடா்ந்து 8-ஆவது முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு மேலாங்குவதையும், இந்தியா மீதான ஜி7 உறுப்பு நாடுகளின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
பிரான்ஸின் ஏவியானில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா தனக்காகப் பேசுவது மட்டுமன்றி, தெற்குலகின் எதிா்பாா்ப்புகளுக்காகவும் குரல் கொடுக்கும். எனது இந்தப் பயணம், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி7 நாடுகள் உடனான இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
இந்தியாவின் உத்திசாா் தொலைநோக்குப் பாா்வையில் பிரான்ஸுக்கு சிறப்பிடம் உள்ளது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தாக்க தொழில் நிறுவனங்களை உலகளாவிய முதலீடுகளுடன் இணைக்க வாய்ப்பளிக்கும் ‘பாரத் இனோவேட்ஸ்’ வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அதிபா் மேக்ரானுடன் இணைந்து தொடங்கிவைக்க ஆா்வத்துடன் உள்ளேன்.
இதேபோல், ஸ்லோவாக்கியா நாட்டுக்கான எனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இருதரப்பு நல்லுறவுக்கு மேலும் உத்வேகமூட்டும். அந்நாட்டு தலைவா்கள் உடனான சந்திப்பை பெரிதும் எதிா்நோக்கியுள்ளேன்.
இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய யூனியன் உடனான உத்திசாா் கூட்டுறவுக்கு இந்தப் பயணம் மேலும் ஊக்கமளிக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
Summary
Week-long foreign tour: Prime Minister Modi leaves for France – to participate in the G7 summit!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










