ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! உத்தவ் சிவசேனை மீண்டும் உடைகிறதா?

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது பற்றி...

Twist in Maharashtra politics: Possible Shift of UBT MPs to Shinde Camp

ஏக்நாத் ஷிண்டே | உத்தவ் தாக்கரே - கோப்புப் படம்

Published On :11 ஜூன் 2026, 5:07 pm IST

மகாராஷ்டிரத்தில் கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே என இரு தரப்பாக சிவசேனை கட்சி உடைந்த நிலையில், தற்போது மீண்டும் சிவசேனையில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

2022 அரசியல் நெருக்கடி

மகாராஷ்டிரத்தில் சிவசேனை -காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

சிவசேனை கட்சியில் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்ததால் மகாராஷ்டிரத்தில் ஆட்சியே கவிழ்ந்தது. பின்னர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரத்தின் முதல்வரானார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என சிவசேனை இரண்டாகப் பிரிந்தது. எனினும் இந்தியத் தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணியைத்தான் 'சிவசேனை' என அங்கீகரித்து அந்தக் கட்சியின் 'வில் மற்றும் அம்பு' சின்னத்தை வழங்கியது.

மறுபுறம் உத்தவ் தாக்கரேவின் அணி 'உத்தவ் பாளா சாகேப் தாக்கரே' (UBT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் உத்தவ் தாக்கரே ஈடுபட்டு வருகிறார்.

சிவசேனை பிளவுக்குப் பிறகு 2024ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் சிவசேனை - பாஜக - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸும் துணை முதல்வராக ஷிண்டேவும் உள்ளனர்.

மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸுடன் துணை முதல்வர் ஷிண்டே...

மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸுடன் துணை முதல்வர் ஷிண்டே... - IANS

புதிய நெருக்கடி...

தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனையில் 9 எம்.பி.க்கள் உள்ள நிலையில் 7 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை மேலும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே அணியில் தற்போது அரவிந்த் சாவந்த் (மும்பை தெற்கு), சஞ்சய் தேஷ்முக் (யவத்மால்-வாஷிம்), நாகேஷ் பட்டீல் அஷ்டிகர் (ஹிங்கோலி), சஞ்சய் ஜாதவ் (பர்பானி), ராஜாபாவ் வாஜே (நாசிக்), சஞ்சய் தினா பட்டீல் (மும்பை வடகிழக்கு), பௌசாகேப் வாக்சௌரே (சீரடி), அனில் தேசாய் (மும்பை - தென்மத்திய), ராஜே நிம்பல்கர் (தாராஷிவ்) உள்ளனர்.

இவர்களில் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகிய இருவர் தவிர மற்ற 7 பேரும் கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தில்லி சென்றபோது, அவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் அரசியல்ரீதியாக தாக்கரே தரப்பு எம்.பி.க்களுக்கு வாக்குறுதிகள் அளித்ததாகக் கூறப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அமைச்சரவையில் இடம்பெறும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்கரே தரப்பு எம்.பி. ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தருவது உறுதியாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தலைவர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடவில்லை.

தலைநகரில் உள்ள மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவின் இல்லத்திலும் சந்திப்புகள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் பல மாதங்களாகவே தாக்கரே தரப்பு எம்.பி.க்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, அதாவது சுமார் 6 மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகே அவர்கள் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல மத்திய அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றம் செய்யப்பட்டால், ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கும் வாய்ப்பு தரப்படலாம் என்று கூறப்படுகிறது.

தாக்கரே தரப்பு எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்குச் சென்றால், 2022-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் உத்தவ் தாக்கரேவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும். அதேநேரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை மேலும் வலுப்பெறும். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலம் பெறும்.

முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரே, கடந்த 2019-ல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு முன்னுரிமை, இந்துத்துவா கொள்கை என்ற அடிப்படையுடன் தொடங்கிய கட்சி, காங்கிரஸுடன் இணைந்தது பலருக்குப் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிளவைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனையிலும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Twist in Maharashtra politics: Possible Shift of UBT MPs to Shinde Camp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.